2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கல்குவாரியில் தள்ளிக் கொலை ஒன்றரை ஆண்டிற்குப்பின் கணவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே 2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் மனைவியை கல்குவாரியில் தள்ளி கொலை செய்ததாக கணவர் அளித்த வாக்குமூலத்தால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கொண்டாநகரை சேர்ந்தவர் மகாராஜன், 40. இவர் 2008-ல் கடலுார் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டையை சேர்ந்த அமராவதி 34, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2025 மே மாதத்துக்கு பிறகு அமராவதி தனது பெற்றோருடன் தொடர்பு கொள்ளவில்லை. இதுகுறித்து மகாராஜனிடம் கேட்டபோதும் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அமராவதி மாயமானது குறித்து அவரது தாயார் கடந்த 23-ம் தேதி சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை யில் மகாராஜன் அளித்த தகவலின் அடிப்படையில், கங்கைகொண்டான் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பாப்பான்குளம் அருகே உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் சில எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன.
தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி ஆய்வு செய்தார்.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி அங்கு விசாரித்தார்.
இதில் மகாராஜன் கடந்த 2024-ல் அகிலா 23, என்பவரை 2-வது திருமணம் செய்தது தெரியவந்தது. இதற்கு அமராவதி எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2025 மே மாதம் ஏற்பட்ட தகராறின்போது, அமராவதியை டூவீலரில் பாப்பான்குளம் கல்குவாரிக்கு அழைத்துச் சென்று தாக்கி, குவாரிக்குள் தள்ளி கொலை செய்ததாக மகாராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட எலும்புகள் தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அமராவதியுடையதா என்பது அறிவியல் பூர்வமான பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்யப்பட உள்ளது.