📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 09:04 PM

வங்கி வேலைநிறுத்தம்: 5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடக்கம்

வங்கி வேலைநிறுத்தம்: 5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடக்கம்

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

வங்கி வேலை நாள்களை வாரத்தில் ஐந்து நாள்களாகக் குறைக்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகைகளைச் சமமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, வங்கிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்தில் நாடு முழுதும் ஏறக்குறைய இரண்டரை லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதத்தின் நான்காவது சனிக்கிழமையான செப்டம்பர் 26ஆம், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 27ஆம் வழக்கமான விடுமுறை நாள்கள். அவற்றைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால், தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு வங்கிகளின் நேரடிச் சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களின் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இருப்பதை உறுதிசெய்ய வங்கிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், பணத்தை எடுத்துச்செல்லும் வாகனங்கள், கருவூலங்களுக்குப் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கும் மத்திய வங்கித் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை, போராட்டத்தால் பொதுமக்கள் சிரமப்படுவதைத் தவிர்க்க, தேவையான பணத்தை முன்னதாகவே எடுத்துவைத்துக்கொள்ளுமாறு இணையவழி மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, போராட்டத்தைக் கைவிடுமாறு வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.