துவாஸ் துறைமுகத்தில் ஊழியர் மரணம்
துவாஸ் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலையில், சரக்குகளை நகர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடலில் விழுந்து ஊழியர் இருவர் உயிரிழந்தனர்.
காலை மணி 8.40க்கு ஊழியர்கள் சரக்குகளைக் கையாளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சம்பவம் நடந்ததாகத் துறைமுகத்தை நடத்தும் ‘பிஎஸ்ஏ சிங்கப்பூர்’ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் செப்டம்பர் 23ஆம் தேதி ஊடகங்களுக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.
சரக்குகளைக் கையாளும் பணி என்பது துறைமுக முனையங்களில் உள்ள கப்பல்களில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது, அடுக்கிவைப்பது, பாதுகாப்பாகக் கட்டிவைப்பது முதலிய வேலைகளைக் குறிக்கிறது.
ஊழியர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டு அவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டது என்றும் மற்றோர் ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் அங்கு உயிரிழந்தார் என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
“பிஎஸ்ஏ நிறுவனம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சிரமமான காலகட்டத்தில், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவை நாங்கள் வழங்கி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
கூடுதல் தகவல்களுக்காகக் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, மனிதவள அமைச்சு ஆகியவற்றை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டுள்ளது.
அங்கு நேர்ந்த சில வேலையிட மரணங்களைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூராங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளமொன்றில், இம்மாதம் 11ஆம் தேதி காற்றழுத்தக் கருவியுடன் இணைக்கப்பட்ட குழாய் ஒன்று மோதியதில் 35 வயது ஊழியர் உயிரிழந்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
முன்னதாக, ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஜூராங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் நின்றிருந்த லாரி மீது சாரக்கட்டு சரிந்து விழுந்ததில் 23 வயது ஊழியர் மரணமடைந்தார்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 21 வேலையிட மரணங்கள் நேர்ந்தன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நேர்ந்த 18 மரணங்களைக் காட்டிலும் இது அதிகம்.
இணையவழி ஊழியர்கள் சாலையில் உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்தது அதற்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவான 21 உயிரிழப்புகளில் வாகன விபத்துகள் முதன்மையான காரணமாக அமைந்தன. வாகன விபத்துகளில் ஒன்பது பேர் மாண்டனர்.
மூச்சுத்திணறல் அல்லது நீரில் மூழ்குதல் மற்ற முன்னணிக் காரணங்களில் அடங்கும். அவை ஐந்து உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தன.