📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 16, 2026 08:33 AM

விஜய்

விஜய்

விஜய் - அஜித் IN அரசியல் மங்காத்தா!

திரைத்துறைக்கு வந்த புதிதில் இருவருக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் இருந்ததில்லை. 1995-ல் வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில், அஜித் - விஜய் இருவரும் ஒன்றாகவே நடித்தனர்

திரைத்துறையில், கடந்த கால் நூற்றாண்டுக்காலம் எதிரும் புதிருமாக இருந்த விஜய் - அஜித் இருவரும் லண்டனில் மாறி மாறிப் பாசமழையைப் பொழிந்து கொண்டதுதான், தமிழகத்தின் இன்றைய ‘ஹாட் டாபிக்’. வெளிநாடு தொழில் முதலீடுகளை ஈர்த்துவருவதாகக் கூறி லண்டனுக்குப் பறந்த முதல்வர் விஜய், நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேஸுக்குக் கொடி அசைத்து தொடங்கிவைத்ததைத் தாண்டி, வேறெந்த நடவடிக்கையையும் லண்டனில் தரையிறங்கிய முதல் 48 மணி நேரத்துக்குச் செய்யவில்லை. அஜித்துடன் போட்டோ ஷூட், நண்பர்களுடன் கொண்டாட்டம் எனக் குதூகலமாக இருந்திருக்கிறார் முதல்வர் விஜய்.

பரவிவரும் டெங்குக் காய்ச்சல், மின்சாரத் தட்டுப்பாடு, விவசாயிகள் போராட்டம், புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத்துக்கு ஒன்பது மீனவ கிராமங்கள் எதிர்ப்பு எனத் தமிழகமெங்கும் பிரச்னைகள் தலைவிரித்தாடும் நிலையில், முதல்வர் குதூகலமாகப் பொழுதைக் கழித்தது எதிர்க்கட்சிகளிடம் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. “முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு வேற போட்டோதான் வந்திருக்கு. நானும் எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒண்ணும் வரலை...” என்று காரமாகவே பதிலடி கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி. அது குறித்தெல்லாம் த.வெ.க நிர்வாகிகளும் முதல்வருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

“கோலிவுட்டில், அ.தி.மு.க - தி.மு.க போல எதிரெதிர் யுத்தம் செய்துகொண்டிருந்த அஜித் - விஜய் இருவரும், திடீரெனக் கரம் கோத்ததன் பின்னணி என்ன?”, களமிறங்கி விசாரித்தோம்.

கால் நூற்றாண்டு யுத்தம்!

விஜய் - அஜித் இருவரின் திரைப்பயணத்தில், ரசிகர்களுக்கு இடையேயான யுத்தம் பெரும் பிரச்னைகளை உருவாக்கியதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டின் சீனியர் தயாரிப்பாளர்கள்.

`அஜித் - விஜய்’ எனப் பத்திரிகைகளில் எழுதினால், ‘என் பெயரை முதலில் போட்டு, விஜய் - அஜித் என எழுதுங்கள்...’ என்று எழுதியவர்களை அழைத்து விஜய் சொல்லும் அளவுக்குப் பிரச்னை இருந்தது. ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று விஜய் வசனம் பேசினால், அதற்கு பதிலடியாக, ‘என் வாழ்க்கை வட்டமல்ல. ஒரு நேர்கோடு’ என்று தன் படத்தில் பன்ச் பேசுவார் அஜித். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என்று விஜய்யின் சினிமா கரியர் உயர்ந்த சமயத்தில், ‘ஜி’, ‘ஜனா’, ‘பரமசிவம்’, ‘ஆழ்வார்’ என்று தோல்விப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார் அஜித். அப்போதுதான், அவரை உருவக்கேலி செய்து விஜய் ரசிகர்கள் கிண்டலடித்தார்கள். பதிலுக்கு அஜித் ரசிகர்களும் வாள் வீச, போர்க்களமானது சமூக வலைதளம்.

இந்த மோதல் உச்சமடைந்து, சினிமா தியேட்டர்களில் அடிதடிப் பிரச்னை, ஒரு சண்டைப் பயிற்சியாளர் வீட்டில் கல்லெறி சம்பவம் வரை போகவும், 2010-ல் தன்னுடைய ரசிகர் மன்றங்களை அதிரடியாகக் கலைத்தார் நடிகர் அஜித். அதன் பின்னரும் மோதல் முடிவுக்கு வரவில்லை. ஆர்குட் இருந்தபோது தொடங்கிய பஞ்சாயத்து, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் வரவுகளுக்குப் பிறகும் கால் நூற்றாண்டுகளாகச் சமூக வலைதளங்களில் தீப்பிடித்து எரிந்தது. தேர்தலுக்கு முன்புவரை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ‘விஜய் கண்டிப்பாக ஜெயிக்க மாட்டார்’ என அனைவரிடமும் சொல்லிவந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிலைமை அப்படியே மாறிவிட்டது.

அஜித்தின் தாயார் மறைவுக்கு, முதல்வராக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் விஜய். உடன், நடிகை த்ரிஷாவும் சென்றார். அவருடைய தாயார் இறுதிச்சடங்கு எந்தத் தடங்கலும் இல்லாமல் சுமுகமாக நடப்பதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதில் ரொம்பவும் நெகிழ்ந்துபோய்விட்டார் அஜித். அவருடைய அழைப்பின் பெயரில்தான், லண்டனில் நடந்த லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய். சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தையும், அரங்கத்தையும், அதன் தொழில்நுட்பங்களையும் நேரில் கண்டார்” என்றனர் விரிவாக.

திகில் என்ட்ரி த்ரிஷா!

கார் பந்தயத்தைத் தொடங்கிவைத்ததோடு, ஓடிச் சென்று அஜித்தைக் கட்டியணைத்து அவரது தோளில் முதல்வர் விஜய் முத்தமிட்டது, சர்வதேச அளவில் வைரலாகிவிட்டது. சமூக வலைதளங்களில் இதுநாள் வரை அடித்துக் கொண்டிருந்த அஜித் - விஜய் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை உருவாக்கிவிட்டது. அஜித்தின் காரில் ஏறி அமர்ந்து ஸ்டைலாக போட்டோ ஷூட்டெல்லாம் நடத்திக்கொண்டார் விஜய்.

முதல்வரோடு லண்டனுக்குப் பயணித்திருக்கும் அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாகவும், சர்வதேசத் தரத்தில் கார் பந்தயங்களை நடத்துவதற்கும், சென்னையில் ஒருங்கிணைந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்கு முடிவுசெய்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான பொறுப்பு, விளையாட்டுத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சில்வர்ஸ்டோன் மைதானம், அரங்கம் ஆகியவற்றின் வடிவமைப்பை நேரில் பார்த்துவிட்டு, அதுபோல சென்னையிலும் கட்டுவதற்காகத்தான் முதல்வருடன் லண்டனுக்கு வந்தார் அமைச்சர் ஆதவ்.

தொழில் முதலீடுகளுக்கான சந்திப்புகளோடு, அஜித்தின் கார் ரேஸை முதல்வர் தொடங்கி வைப்பதுதான் திட்டம். ரசிகர்கள் கூட்டம் திரண்டுவிடும் என்பதால், அதை ரகசியமாகவே வைத்திருந்தோம். லண்டன் ‘ஷாங்ரி-லா’ ஹோட்டலில்தான் முதல்வருக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் ரூம் போடப்பட்டது. லண்டனுக்கு வந்ததிலிருந்தே குஷியாகிவிட்டார் முதல்வர். அவர் அணிந்திருந்த லெதர் கோட்டைப் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது என முதல்வரின் உதவியாளர் ராஜேந்திரன் சொல்லவும், அவருக்குப் புதிதாக ஒரு லெதர் கோட்டை வாங்கிக் கொடுத்துவிட்டார் முதல்வர் விஜய்.

லண்டனுக்கு முதல்வர் வந்திருந்த வேளையில், கார் பந்தயத்தை ரசிக்க, நடிகை த்ரிஷாவும் வந்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. முதல்வர் இருந்த அறையில் வந்தமர்ந்துகொண்டு, முதல்வருக்கு நெருக்கமான விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிசாமியுடன் அரட்டை அடித்தார் த்ரிஷா. அவரை வைத்துக்கொண்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் எதையும் முதல்வரிடம் பேச முடியவில்லை. ஒருகட்டத்தில் இருவரும் லாபிக்குச் சென்று, இடைத்தேர்தல் தொடர்பாக சில விஷயங்களை விவாதித்தனர். அப்போது திடீரென லாபிக்கு வந்த த்ரிஷா, வெளியே கார் ரேஸை எட்டிப் பார்க்கவும், அது கேமராக்களில் பதிவாகிவிட்டது. அவர் அருகில் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு முதல்வரும் விருட்டென அறைக்குள் சென்றுவிட்டார். பிறகு, மூன்று மணி நேரத்துக்கு மேல் கார் பந்தயத்தைக் கண்டு ரசித்தார் முதல்வர்” என்றனர்.

விஜய் - அஜித்... அரசியல் மங்காத்தா!

போட்டோ ஷூட், நடிகை த்ரிஷாவுடன் கார் ரேஸ் கொண்டாட்டம் என முதல்வரின் லண்டன் பயணம், உலகம் முழுதும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில்தான், 11,000 கோடி ரூபாய் வெளிநாடு முதலீடுகளைத் தமிழகத்துக்கு ஈர்ப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், ‘அஜித்தின் கார் ரேஸை, முதல்வர் ஏன் மெனக்கெட்டு லண்டன் வரை சென்று தொடங்கிவைக்க வேண்டும்?’ என்ற கேள்வி, ரசிகர்களிடையே அனலைக் கிளப்பியது.

அந்தக் கேள்விக்கு விடையளிக்கும்விதமாக, நம்மிடம் பேசிய வியூக வகுப்பாளர்கள் சிலர், “இருவரின் லண்டன் சந்திப்புமே, ‘எனக்கு வாக்கு - உனக்கு வணிகம்’ என்கிற மங்காத்தா ஆட்டம்தான். விஜய்க்கு இவ்வளவு மாஸ் இருந்தும், 108 இடங்களில்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. முதன்முறை தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால், அனைவரும் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்கிற அச்சம் விஜய்க்கு உண்டு. நடிகர் தனுஷ் போன்றவர்கள் அரசியலுக்கு வர விரும்புவதால், விஜய்க்கு விழுந்த இளைஞர்களின் வாக்குகள் பெருமளவில் சிதறலாம். அதனால்தான், அஜித் ரசிகர்களைத் தனதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார் விஜய்.

விஜய்யும் அஜித்தும் சமகாலத்தில் ஒன்றாகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கடும் போட்டியை உருவாக்கியவர்கள். மதுரைக்கு தெற்கே அஜித்துக்கென ஒரு பெரும் கூட்டம் இன்னமும் இருக்கிறது. இனி வரும் அஜித்தின் படங்களில், விஜய்யின் ஆட்சியைச் சீண்டுவதுபோலக் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெற்றால், அது பெரும் கவனத்தை ஈர்க்கும். விஜய்க்கு பெரும் குடைச்சலை உருவாக்கும். இப்போது, அஜித்தின் கார் ரேஸைக் கொடியசைத்து தொடங்கிவைப்பதன் மூலம், அவரின் ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்க நினைக்கிறார் விஜய். அப்படி, சில லட்சம் வாக்குகள் கிடைத்தாலும் விஜய்க்கு லாபம்தான்.

அஜித்தைப் பொறுத்தவரை, அவருடைய கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ தீபாவளிக்கு ரிலீஸாகப்போகிறது. ஆனால், ஓடிடி-யில் அதற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பெரிய நிறுவனங்கள் வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். அதனால், விஜய் தற்போது லண்டனில் கொடியசைத்துத் தொடங்கிவைத்தது போன்ற காட்சிகளை, அந்த ஆவணப்படத்தில் சேர்க்கவிருக்கிறார்கள். இதன் மூலமாக விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்ப்பார்கள், ஓடிடி-யில் நல்ல வியாபாரமாகும் என்பது அஜித்தின் வியாபாரக் கணக்கு. ஆகவே, இருவரும் ஆளுக்கொரு கணக்கோடுதான் மங்காத்தா ஆடியிருக்கிறார்கள்’’ என்றனர்.

விஜய் - அஜித் மங்காத்தா ஆட்டம், சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, தமிழக அரசியலையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கிவிட்டது!