மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
இடைத்தேர்தல்
த.வெ.க., தி.மு.க. வேட்பாளர்கள் மனு
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார்.தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இன்று கடைசி நாள்
தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.இதில் நேற்று தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா தி.மு.க. வேட்பாளராக 4 மனுக்களைத் தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோருடன் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் மனு அளித்தார். மேலும் இவரது கணவர் மணிவாசகமும் ஒரு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தயபாமா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 09 ஆம் தேதியும் நடைபெறும்.