📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 10:04 PM

வெற்றிப் பயணம் திட்டத்தால் பெரம்பலூரில் 22 மினி பேருந்துகளின் சேவை நிறுத்தம்

வெற்றிப் பயணம் திட்டத்தால் பெரம்பலூரில் 22 மினி பேருந்துகளின் சேவை நிறுத்தம்

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் தமிழக அரசின் வெற்றிப்பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தனியார் பேருந்துகளை பெண்கள் புறக்கணித்துவிட்டு, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, டீசல் செலவுக்குக்கூட வருமானம் கிடைப்பதில்லை என உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 43 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் 22 மினி பேருந்துகளின் இயக்கம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை, குன்னம் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த மினி பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டன.

இதனால், அந்தப் பேருந்துகளின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால் பெரம்பலூரில் இனி எந்த தனியார் மினி பேருந்தும் இயங்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியபோது, “பெரம்பலூரில் 22 மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சில பேருந்துகள் போதிய லாபம் இன்றி இயக்கப்படுகின்றன. மக்கள் தொடர்ந்து மினி பேருந்தை புறக்கணித்தால், மினி பேருந்து சேவை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்.

எனவே, தமிழக அரசு வெற்றிப் பயண திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதில், மினி பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களிலும், நேரத்திலும் அரசுப் பேருந்துகளை இயக்காமல் வழித்தடத்தையும் நேரத்தையும் மாற்றி அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என்றனர். இதற்கிடையே, பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் வழியாக ஏராளமான மக்கள் சேலத்துக்கு பயணித்து வருகின்றனர்.

இதில் ஆத்தூருக்குச் செல்லும் பெண்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால், அவை எப்போதும் கூட்டமாகவே காணப்படுகின்றன.

இது பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, பெண்கள், மாணவிகள் அதிகளவு காத்திருக்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பாதிக்கப்படும் பெண்கள், மாணவிகள், பொதுமக்கள் இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.