📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 05:33 AM

வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் ரீல்ஸ்; தவெக

வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் ரீல்ஸ்; தவெக

வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் ரீல்ஸ்; தவெக-கம்யூனிஸ்ட் கடும் வாக்குவாதம்: தாராபுரம் ஆர்டிஓ ஆபிசில் பரபரப்பு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று கடைசி நாள் என்பதால் தாராபுரம் ஆர்டிஓ அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. தவெக வேட்பாளர் சத்தியபாமா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் செய்தியாளர்கள் எனக்கூறி தவெக நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து ரீல்ஸ் எடுத்தனர். 5 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் எச்சரித்தும் தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன், சுப்பராயன் எம்பியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் மோகத்தில் அலப்பறையில் ஈடுபட்டிருந்தனர். இதைப்பார்த்த சுப்பராயன் எம்பி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் எப்படி இத்தனை பேரை உள்ளே அனுமதித்தீர்கள் என கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் சுப்பராயன் எம்பியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து தவெக நிர்வாகிகளை எச்சரித்து வெளியேற்றினர்.

தவெக வேட்பாளர், அமைச்சர்களை பார்த்து துரோகி என கோஷமிட்ட அதிமுகவினர்: தவெக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு ஆர்டிஓ அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது, அங்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அதிமுக வேட்பாளர் பானுமதியுடன் வந்த அதிமுகவினர் சத்தியபாமாவையும் அவருடன் வந்த தவெக அமைச்சர்களை பார்த்தவுடன் துரோகியே... திரும்பிப் போ.. அதிமுகவில் வெற்றி பெற்று தவெகவிற்கு வால் பிடிக்க சென்றாயா? துரோகியே தொகுதிக்குள் வராதே என்ன கோஷமிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சத்தியபாமா அமைச்சர்களுடன் அந்த இடத்தை விட்டு விரைவாக புறப்பட்டு சென்றார். இதனால், அங்கு 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.