📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 04, 2026 10:03 PM

வேலை தருவதாகக் கூறி பாலியல் தொல்லை: ஜெம் வீரமணி மீது போலீஸில் மேலும் ஒரு பெண் புகார்

வேலை தருவதாகக் கூறி பாலியல் தொல்லை: ஜெம் வீரமணி மீது போலீஸில் மேலும் ஒரு பெண் புகார்

‘ஜெம்’ வீரமணி

சென்னை: ஜெம் வீரமணி மீது திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வீரமணி மீது 5-வது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் இதுவரை முக்கியக் குற்றவாளியான வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்தார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கை விசாரிக்க 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐடி குழுவின் விசாரணை அதிகாரியாக இருந்த துணை ஆணையர் கீதாஞ்சலி அக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகச் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கீதா புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல் துறை தரப்பில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் அளிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் பிரத்யேக செல்போன் எண் (93453 19676) வெளியிடப்பட்டது. இந்த எண்ணுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வாட்ஸ் அப் மூலம் புதிய பாலியல் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில், ‘‘கடந்த 7 ஆண்டுக்கு முன்பு, நான் சிறுமியாக இருக்கும் போது வேலை தேடி சென்னை வந்தேன். அப்போது வேலை தருவதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து சென்று வீரமணி என்னிடம் தவறாக நடந்து கொண்டார்’’ என்று கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இப்புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, வீரமணி மீது 5-வது போக்சோ வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதனால் வீரமணி மீதான பிடி மேலும் இறுகியுள்ளது.