📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 05:03 AM

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கலாம்! பார்ம் 6 இணைப்பை கைவிட்டது தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கலாம்! பார்ம் 6 இணைப்பை கைவிட்டது தேர்தல் கமிஷன்

கோவை: கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், விடுபட்ட வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இது பற்றி வீடியோ கான்பரன்ஸ் வழியே ஆலோசனை நடந்தது. வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன், மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற அடிப்படையில் கலெக்டர் பவன்குமார் விவாதித்தார்.

அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்துவது குறித்து பேசினர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, படிவம், 6 உடன் இணைக்கும் உறுதிமொழி படிவம், வாக்காளர் பதிவு விதிகளின்படி மட்டுமே பயன்படுத்தப்படும் என கலெக்டர் அறிவித்தார்.

அதாவது, இதற்கு முன் நடந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்தபோது பின்பற்றிய நடைமுறை இனிமேல் இருக்காது என்பதை கலெக்டர் தெளிவுபடுத்தினார்.

எஸ் ஐ ஆர் என்ற பெயரில் அப்போது நடந்த திருத்தத்தின் போது, படிவம் 6 உடன் ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டது. பெயர் சேர்க்க விரும்புபவரின் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோரின் வாக்காளர் அட்டை நம்பர் என்ன, அவர்கள் எப்போது எந்த சாவடியில் ஓட்டு போட்டார்கள் என்ற கேள்விகள் அதில் இருந்தன.

இந்த விவரங்கள் அநேகமாக எவரிடமும் இருக்காது. எனவே படிவத்தை பூர்த்தி செய்ய இயலாது. இதனால், அந்த விண்ணப்பதாரர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாது. பலரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நோக்கத்துடன் இந்த படிவம் சேர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுவரை 13 கோடி 30 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தமிழகத்தில் 74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இவ்வாறு படிவம் 6ல் புதிதாக ஒரு விதியை சேர்க்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது; இது சட்ட விரோதமானது என இரண்டு தேர்தல் கமிஷனர்களும் ஆட்சேபித்தனர்; ஆனால் தலைமை தேர்தல் கமிஷனர் அதை ஏற்கவில்லை என்று ஒரு நாளிதழ் சமீபத்தில் அம்பலப்படுத்தியது.

அவ்வாறு தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என கமிஷன் அறிக்கை விட்டது. ஆயினும், படிவம் 6ல் செய்த திருத்தத்தை சத்தமில்லாமல் விலக்கிக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக, எஸ் ஐ ஆர் அறிமுகத்துக்கு முன்னால் படிவம் 6 எப்படி இருந்ததோ, அதே வடிவில் வாக்காளர்களுக்கு கொடுத்து பூர்த்தி செய்யுமாறு எஸ் ஐ ஆர் நடந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதையடுத்து, கலெக்டர் இந்த கூட்டத்தை நடத்தி உள்ளார். சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.