நீதியரசரின் உரத்த குரல்!
நீதியரசரின் உரத்த குரல்!
``மூன்று ஃபைல்கள் ஆதாரங்களோடு என் டேபிளில் இருக்கின்றன. எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன்’’ என்று முதல்வர் விஜய், ஆகஸ்ட் 19-ம் தேதி சட்டமன்றத்தில் பேசினார். அவை, எது தொடர்பான ஃபைல்கள் எனத் தெரியவில்லை. ஆனால், 2024, நவம்பர் 22-ம் தேதி புகாரளிக்கப்பட்டு 2025, அக்டோபர் 7-ம் தேதி போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டு 2026, பிப்ரவரி 18-ம் தேதி `போதிய ஆதாரம் இல்லை' என நீதிமன்றத்தில் `Further Action Dropped' அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வீரமணி தொடர்பான ஃபைல் முதல்வர் டேபிளுக்கு வந்ததா, இல்லையா?
2025, அக்டோபர் 6-ம் தேதி ICWO தொண்டு நிறுவனத்தினர் வீரமணி மீது புகாரளித்தபோது சென்னை காவல்துறை ஆணையராக இருந்தவர் அருண். 2026, பிப்ரவரி 18-ம் தேதி, `போதிய ஆதாரம் இல்லை' என நீதிமன்றத்தில் `Further Action Dropped' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதும், அருணே சென்னை காவல் ஆணையர். அருண் மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் 2026, ஏப்ரல் 10-ம் தேதி, அவரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது, தேர்தல் ஆணையம்.
ஜூன் 19-ம் தேதி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வீரமணி வழக்கு வந்தபோது, முந்தைய `Further Action Dropped' அறிக்கையின்படி, வழக்கை முடித்துவைக்கும்படி கோரியது காவல்துறை. அதை ஏற்க மறுத்த நீதிபதி பத்மா சண்முகசுந்தரம், அந்த அறிக்கையை நிராகரித்து மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன் பிறகே வீரமணி வழக்கு உயிர் பெற்றது. ஜூலை 20-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 3-ம் தேதிகளில் விசாரணைக்கு வந்தபோதும் காவல்துறைத் தரப்பில் முழுமையான விவரங்கள் அளிக்கப்படவில்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முதல்வர் விஜய் இருவரும் உள்துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள். ஆகவே, தி.மு.க அரசின் நிலைப்பாட்டையே த.வெ.க அரசும் எடுத்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. வீரமணி வழக்கு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அருணை 2026, மே 25-ம் தேதி, ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமித்ததும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது. இத்தனைக்கும் நடுவில் அருண் ஜூலை 13-ம் தேதி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகப் பணி மாற்றம் செய்யப்பட்டாரே தவிர, அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த `மாற்றத்துக்கான அரசு', ஆகஸ்ட் 29-ம் தேதிதான் குற்றம்சாட்டப்பட்ட வீரமணியையே கைதுசெய்திருக்கிறது. வீரமணி வழக்கைப் பற்றி செப்டம்பர் 7-ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் முதல்வர் விஜய் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அதன் பிறகு செப்டம்பர் 24-ம் தேதிதான் அருண் உள்ளிட்ட சில காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவேளை போக்சோ சிறப்பு நீதிமன்றம் காவல்துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், நடந்த கொடூரம் வெளியில் வராமலேயே போயிருக்கக்கூடும். இந்த விவகாரத்தை, தற்போதைய அரசும் அக்கறையோடு அணுகாமல் இடைத்தேர்தல் உத்தியாக மட்டுமே பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.
போக்சோ நீதிபதி பத்மா சண்முகசுந்தரத்தின் உரத்த குரலால் மட்டுமே வீரமணிக்கும், அவருக்கு உதவி செய்தோருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று நம்புவோம்!