வாகை சூடிய விஜய்... ஆறுதலில் ஸ்டாலின்... பரிதாபத்தில் எடப்பாடி!
வாகை சூடிய விஜய்... ஆறுதலில் ஸ்டாலின்... பரிதாபத்தில் எடப்பாடி!
`ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார்’ என்று சொல்லப்பட்டவரை, நான்கு நாள்கள் கொளுத்தும் வெயிலில் அலையவைத்து, கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்.
‘ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே... ஒண்ணு தி.மு.க., இன்னொண்ணு த.வெ.க’ என முதல்வர் விஜய் மேடைதோறும் பேசிவந்ததைப் போலவே அமைந்திருக்கின்றன இரு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள். தமிழ்நாடே உற்றுநோக்கிய மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் ‘இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும் மெசேஜ் என்ன?’ என்பது குறித்து, களமிறங்கி விசாரித்தோம்.
2026 பொதுத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வென்றதுஅ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களான மரகதம், சத்தியபாமா இருவரும் த.வெ.க-வில் இணைந்துவிட்ட நிலையில் இரு தொகுதி இடைத்தேர்தலுக்குத் தயாரானது தமிழ்நாடு. மதுராந்தகம் தொகுதியில், த.வெ.க சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 73,594 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 53,463 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் 46,981 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை த.வெ.க வேட்பாளர் 66,841 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள்.
“திணறிய த.வெ.க... வென்றது எப்படி?”
நம்மிடம் பேசிய த.வெ.க அமைச்சர்கள் சிலர் ``இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடனேயே, மதுராந்தகத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும், தாராபுரத்துக்கு அமைச்சர் அருண் ராஜ்ஜையும் பொறுப்பாளராக நியமித்தார் முதல்வர் விஜய். அவர்களோடு தொகுதிக்கு மூன்று அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், கட்சி நிர்வாகிகளும் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில், ‘அசால்ட்டாக இரு தொகுதிகளையும் அடித்துத் தூக்கிவிடலாம்’ என்ற கணக்கோடுதான் களமிறங்கியதுத.வெ.க. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க-வினர் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று வேலை பார்ப்பதைப் புரிந்து கொண்டு, தங்களுடைய வியூகத்தை மாற்றினர்.
மொத்த அமைச்சரவையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, திருச்சிக்கு தெற்கேயுள்ள அமைச்சர்களும், கொங்கு ஏரியா அமைச்சர்களும் தாராபுரம் தொகுதிக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொருவரிடமும் தலா 25 வார்டுகள் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன. அதோடு, அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க-வுக்கு வந்த உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட சீனியர்களும் கோதாவில் குதித்தனர். அதேபோல, மதுராந்தகத்திலும் இதர அமைச்சர்களுக்கு வார்டு பிரிக்கப்பட்டு, பொறுப்பாக அளிக்கப்பட்டது. மதுராந்தகத்தைப் பொறுத்தவரை, போட்டியிலிருந்து பா.ம.க விலகிக்கொண்டது த.வெ.க-வுக்கு ரொம்பவும் சாதகமாகிப்போனது.
தாராபுரத்தில், தொடக்கத்திலிருந்த அந்தத் தொகுதி த.வெ.க-வுக்குச் சாதகமாக இல்லை. குண்டடம், மூலனூர், தாராபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் தாராபுரம் டவுன் தொகுதிக்குள் வருகின்றன. அவற்றில், குண்டடம் ஒன்றியம் அ.தி.மு.க பலமாக இருக்கும் பகுதி. மூலனூரில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணியின் களப்பணியால், அ.தி.மு.க-வின் வாக்குகள் உடைந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முறை பிரசாரம், ஒரு முறை ரோடு ஷோ என இரண்டு தொகுதிகளிலும் ரவுண்ட் வந்தார் முதல்வர் விஜய். டிராக்டர் ஓட்டுவது, டீ குடிப்பது, முருங்கைக்காய் பறிப்பது, ரேக்ளா வண்டியை ஓட்டுவது என மக்களைக் கவரும் பல விஷயங்களைச் செய்தார். மூலனூர் ஒன்றியத்திலுள்ள வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் வழிபட்டதை, கவுண்டர் சமூகத்தினர் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்த்தனர். இதனால்தான், கடைசி நேரத்தில் பல நியூட்ரல் வாக்குகள் த.வெ.க-வுக்குச் சாதகமாக மாறின. ‘நான் பிரசாரத்துக்குப் போன பிறகு எல்லாமே மாறும்’ எனக் கட்சி சீனியர்களிடம் சொன்னதுபோல, சொல்லி அடித்திருக்கிறார் முதல்வர் விஜய். இந்தத் தேர்தல் வெற்றி த.வெ.க-வுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருப்பதுடன், கட்சியைக் கட்டமைப்பதற்கான பணிகளையும் வேகமெடுக்க வைத்திருக்கிறது” என்றனர்.
இரண்டாமிடத்தில் தி.மு.க... ஆறுதலில் ஸ்டாலின்!
நம்மிடம் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் களம் கண்ட போதே மதுராந்தகம் தொகுதியில் 2026-ல் மூன்றாமிடம் பிடித்தது தி.மு.க. பின்னர் கூட்டணிக் கட்சிகளெல்லாம் த.வெ.க முகாமுக்குத் தாவிய நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாமிடமே கிடைக்கும் எனக் கருதினோம். அதுபோல தாராபுரத்தில் கட்சிக் கட்டமைப்பு வலுவாக இல்லாததோடு, கவுண்டர் சமூகத்தினர் நிறைந்து வாழ்வதால் அங்கே அ.தி.மு.க வாய்ஸ் இருக்கும் என்றே சொல்லப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் மூன்றாமிடத்தையே பிடிப்போம் என்றுதான் நினைத்தோம். அ.தி.மு.க வலுவாக இருக்கும் மதுராந்தகத்தில் அந்தக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறோம். பட்டியல் சமூகத்தினர், வன்னியர் நிறைந்து வாழும் பகுதிகளில்கூட தி.மு.க-வுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஓர் இடைத்தேர்தலில் எந்தக் கூட்டணிக் கட்சிகளின் தயவும் இல்லாமல் இரண்டாம் இடத்தையும், கணிசமான வாக்குகளையும் பெற்றிருப்பது ஆறுதல் தரக்கூடிய செய்தி
மூன்றாமிடத்தில் எடப்பாடி... கலகலத்துப்போன அ.தி.மு.க!
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் “இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே தாராபுரம் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்பட்டது. த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எழுந்த எதிர்ப்பு, சமூகரீதியான வாக்குகள், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் உள்ளிட்ட விஷயங்கள் அ.தி.மு.க-வின் வெற்றிக்குக் கைகொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியடைந்ததோடு, மூன்றாவது இடத்துக்கும் வந்திருக்கிறது. இந்த நிலையில், சரியான திட்டமிடல் இல்லாததே இந்தத் தோல்விக்குக் காரணம்” என்கிறார்கள்.
அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரோ ``இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியிருந்தபோது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பல நிர்வாகிகள் த.வெ.க-வுக்குச் சென்றனர். அவர்கள் தொகுதி முழுவதும் சுற்றி வந்து வாக்குகளைச் சேர்த்தனர். எங்களுக்குக் களம் சாதகமாக இருந்தாலும், நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை. இந்தத் தகவல்கள் பொதுச் செயலாளர் காதுக்குப் போனதும், மாவட்டச் செயலாளரைக் கூப்பிட்டு சத்தம் போட்டதோடு, சேலத்திலிருந்து ஒரு டீமை இறக்கி வேலை பார்க்கச் சொன்னார். ஆனால், அவர்களால் லோக்கல் நிர்வாகிகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அது மட்டுமல்ல, எதிர்ப்புகள் இருந்தாலும் த.வெ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இறங்கி வேலை பார்த்தனர். எதிர்ப்புகளை யெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சாதகமாக மாற்றினர். முதல்வர் பிரசாரமும் மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அதேபோல, தி.மு.க சார்பில் பல முன்னாள் அமைச்சர்கள் மைக்ரோ லெவலில் பிரசாரம் செய்து வாக்குகளைச் சேகரித்தனர். ஆனால், இங்கே பல நிர்வாகிகள் பூத்துகளுக்குக்கூட ஒழுங்காகச் செல்லவில்லை. வெளியூரிலிருந்து வந்த நிர்வாகிகளையும் முறையாக ஒருங்கிணைத்து பிரசாரம் செய்யவில்லை. பொருளாதாரரீதியாகவும் பொதுச் செயலாளர் தொடங்கி யாரும் பர்ஸைத் திறக்காமல் இருந்தது பெரிய பின்னடைவாகி விட்டது
குறிப்பாக, மதுராந்தகத்தில் சி.வி. சண்முகம் டீமும், தாராபுரத்தில் வேலுமணி டீமும் எடப்பாடிக்கு எதிராக வேலை பார்த்தனர். எடப்பாடி தோற்றால்தான் அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமியின் பிடியிலிருந்து வெளியே கொண்டுவர முடியும் எனக் கருதினார்கள். அவர்களின் உள்ளடி வேலையும் அ.தி.மு.க வாக்குகள் குறைவதற்குக் காரணம்” என்றனர்
`இடைத்தேர்தல் தரும் மெசேஜ் என்ன?’ என்ற கேள்வியை வியூக வகுப்பாளர்கள் சிலரிடம் முன்வைத்தோம் “மதுராந்தகத்தில் 20 ஆயிரம் வாக்குகள், தாராபுரத்தில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் முதல்வர் விஜய். இத்தனை நாள்கள் `விஜய்யை 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது... அவர் ஒரு கல்ட் எனச் சொன்னார்கள். ஆனால் இடைத்தேர்தல் வெற்றிக்கே முதல்வரைத் தண்ணி குடிக்கவைத்துவிட்டன எதிர்க்கட்சிகள். ஆட்சி முறையாக நடக்கவில்லையென்றால், மக்கள் தோல்வியைக் கொடுப்பார்கள் என்பதுதான் ஆளுங்கட்சிக்கான மெசேஜ்.
வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த தி.மு.க., இரு தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகளைக் கடந்திருப்பது அந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பு, தி.மு.க-வை மக்கள் கைவிடவில்லை என்பதற்கு ஒரு சான்று. தி.மு.க-வினரை இன்னும் உத்வேகப்படுத்தும் சூழலை இந்தத் தேர்தல் ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க-வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது துர்திஷ்டவசமானது” என்றனர்.