உட்லண்ட்ஸ் வீவக வீட்டில் தீ: 50 பேர் வெளியேற்றம்
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் விடமைப்பு வளர்ச்சிக் காக (வீவக) வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) தீ மூண்டதைத் தொடர்ந்து அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அந்த புளோக்கின் ஆறாவது தளத்தில் உள்ள வீட்டில் தீமூண்டது. உட்லண்ட்ஸ் டிரைவ் 14, வீவக புளோக் 514ல் தீ மூண்டதாகத் தனக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
தீ, வீட்டின் ஒரு படுக்கையறையில் உள்ள பொருள்களுடன் சம்பந்தப்பட்டிருந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது.
சம்பந்தப்பட்ட புளோக்கிலிருந்து படை கிட்டத்தட்ட 50 பேரை வெளியேற்றியது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீக்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.
தீயினால் அந்த புளோக்கில் வசிப்போருக்கு அன்றைய இரவு கவலைக்குரியதாக இருந்தது என்று மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேனி சோ திங்கட்கிழமை (அக்டோபர் 12) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
“நல்ல வேளையாக நமது அடித்தளத் தலைவர்களில் ஒருவர் அதைக் கண்டு விரைவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரியப்படுத்தினார். அதனால் அனைவராலும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது,” என்றார் அவர்.