உங்களுக்கு வெட்கமாக இல்லையா மம்தானி? ஐநா சபையில் கடுமையாக சாடிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயார்க் நகர மேயர் மம்தானியை கடுமையாக சாடி பேசினார்.
நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் பங்கேற்று பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்து பேசினார். மேலும் துருக்கி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளையும், நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானியையும் அவர் விமர்சித்தார்.
அப்போது, பேஜர் கருவியை காட்டி, ''இந்த பேஜர் கருவி ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் நினைவிருக்கும்,'' என, எச்சரிக்கும் வகையில் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது: மூன்று ஆண்டுகளில், எங்கள் வீரர்கள் ஏழு முனைகளில் போரிட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் அளவே உள்ள வேறு எந்த நாடாவது, மூன்று ஆண்டுகளாக ஏழு முனைகளில் போரிட முடியுமா? ஈரானின் கொலைகார சர்வாதிகார அரசு, அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பேன் என, உறுதி அளித்திருந்தேன். இஸ்ரேலை அழிப்பதை நோக்கமாக கொண்ட அணு ஆயுதங்கள், ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலானவை.
எங்களை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க ஈரான் திட்டமிட்டது. மாறாக, அமெரிக்காவுடன் இணைந்து அந்நாட்டை கடுமையாக தாக்கினோம். ஈரான் ராணுவத்தையும், அதன் அணு ஆயுத மையங்களையும் அழித்தோம்.நியூயார்க் நகர மேயர் மம்தானி இஸ்ரேலுக்கு எதிரான தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டார். இஸ்ரேல் மீது போர்க்குற்றச்சாட்டு மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்தி வருகிறார். உங்களுக்கு வெட்கமாக இல்லையா மம்தானி? என்னை உங்களால் மவுனமாக்க முடியாது, உண்மையை மவுனமாக்க முடியாது. இஸ்ரேல் இனப்படுகொலையைச் செய்யவில்லை.
மாறாக இனப்படுகொலையைத் தடுத்தது. எங்கள் மக்களை கொடூரமாக கொன்ற ஹமாஸுக்கு ஆதரவளிப்பதற்கு உங்களுக்கே வெட்கமாக இருக்க வேண்டும். மம்தானி, நீங்கள் இந்த நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, நியூயார்க்கில் பல யூதர்கள் பாதுகாப்பற்ற உணர்வை அடைகிறார்கள். அவர்கள் என்னிடம் பேசுகிறார்கள்; என்னிடம் தங்கள் கருத்துக்களைப் பகிர்கிறார்கள். இது நாங்கள் அறிந்த பழைய நகரம் அல்ல; இது மிக விரைவாக மாறிவிட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளித்ததற்காகக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை நீங்கள் பாராட்டுகிறீர்கள். அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குத் தகுதியானதுதான்' என்று கூறிய ஹசன் பைகர் போன்றவர்களை உங்கள் நண்பர்களாகக் கருதுகிறீர்கள். 'அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குத் தகுதியானது' என்று கூறுபவர்கள் என்ன மாதிரியான நண்பர்கள் உங்களுக்கு. இஸ்ரேலியப் பிணைக் கைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் அடித்துத் துன்புறுத்துவதைப் படம்பிடித்த ஒரு பாலஸ்தீனியப் பத்திரிகையாளரை உங்கள் வீட்டிற்கு அழைக்கிறீர்கள்; அந்தப் பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதற்காகவே (நீங்கள் சரியாக யூகித்தீர்கள்) அந்த வீடியோக்களை வெளியிட மறுத்ததாக அவரே பின்னர் ஒப்புக்கொண்டார்.
அக்டோபர் 7ம் தேதி நடந்த படுகொலைகளைப் பாராட்டும் ஒரு பதிவை உங்கள் மனைவி 'லைக்' செய்தார். டெல் அவிவ் நகரம் இருக்கவே கூடாது என்று கூறும் மற்றொரு பதிவையும் அவர் 'லைக்' செய்துள்ளார். இவை எதையும் கண்டிக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாகத் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளீர்கள். மம்தானி, நான் இங்கு வருவதைத் தடுக்க முயன்றீர்கள்.
என் குரலை ஒடுக்க முயன்றீர்கள். ஆனால், உங்களால் என்னை ஒடுக்க முடியாது. உண்மையை ஒடுக்க முடியாது. இதோ அந்த எளிய உண்மை: இஸ்ரேல் இனப்படுகொலை செய்யவில்லை; மாறாக, இஸ்ரேல் இனப்படுகொலையைத் தடுத்தது.இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பேசினார். ஐ.நா., சபையில் உரையாற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரங்கிற்கு வந்த போது, பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறினர். இதனால், அவரது உரையின்போது அரங்கின் பெரும் பகுதி காலியாக இருந்தது