U19 உலககோப்பை வென்ற இந்திய வீரர் உள்பட 60 பேர் வயது முறைகேட்டில் சிக்கினர்.. பெங்கால் கிரிக்கெட்டில் அதிர்ச்சி
U19 உலககோப்பை வென்ற இந்திய வீரர் உள்பட 60 பேர் வயது முறைகேட்டில் சிக்கினர்.. பெங்கால் கிரிக்கெட்டில் அதிர்ச்சி
கொல்கத்தா: பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றுள்ள வயது மோசடி விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது மற்றும் ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டு தடை விதிக்கப்பட்ட 65 பெங்கால் கிரிக்கெட் வீரர்களில், ஒருவர் பிசிசிஐ நடத்திய வினூ மன்கட் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் விளையாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அருண் குமார் சௌராசியா என்ற வீரரின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் சுமார் 115 மாதங்கள் (ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேல்) வயது வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்ற இவரது ஆவணங்களின்படி, இந்த மிகப்பெரிய மோசடி வெளிப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த இரண்டு உள்நாட்டு சீசன்களுக்கு இந்த 65 வீரர்களும் போட்டிகளில் பங்கேற்க வங்காள கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது. இதில் சௌராசியாவின் வழக்கு பிசிசிஐ மற்றும் சிஏபி அமைப்புகளுக்கு பெரும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
2023-24 சீசனில் பிசிசிஐ நடத்திய முதன்மையான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரான வினூ மன்கட் கோப்பையில் சௌராசியா விளையாடியுள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்க இணையதளத்தில் உள்ள ஸ்கோர்கார்டின்படி, அக்டோபர் 18, 2023 அன்று மங்களகிரியில் உள்ள ஏசிஏ மைதானத்தில் பெங்கால் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
அந்தப் போட்டியில் சௌராசியா 10 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், பேட்டிங்கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனை வங்காள கிரிக்கெட் சங்கம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவிலும் உறுதிப்படுத்தியிருந்தது. CAB இணையதளத்தின்படி சௌராசியாவின் பிறந்த தேதி 10 டிசம்பர் 2004 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், போட்டி நடந்த அன்று அவருக்கு 18 வயது தான் ஆகியிருக்க வேண்டும்.
ஆனால், அவரது வயதில் 115 மாதங்கள் வித்தியாசம் இருப்பதால், உண்மையில் அவருக்கு அப்போது சுமார் 28 வயது இருந்திருக்க வேண்டும். 28 வயதுடைய ஒருவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் விளையாடியது, நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள தீவிரப் பாதுகாப்பு குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட 65 வீரர்களும் 2026-27 மற்றும் 2027-28 சீசன்களில் எந்தவொரு போட்டியிலும் விளையாட தகுதியற்றவர்கள் என்று வங்காள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இவர்களில் 12 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்கள் தங்களது பிறப்புத் தேதியில் மிகப்பெரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற அணியின் வீரர் ரவி குமாரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரது ஆவணங்களில் 45 மாதங்கள் வயது முரண்பாடு உள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ரவி குமார், 2022-ல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவ் மீது பிசிசிஐ தனியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது பிறப்பு ஆவணங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் யாதவின் ஆவணங்களில் 27 மாதங்கள் முரண்பாடு இருந்தது கண்டறியப்பட்டது.