📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 04, 2026 05:03 PM

ஆசிய போட்டிக்காக ஜப்பானில் கண்டெய்னர் வீடு.. வீரர்கள் வசதிக்காக இந்தியாவிலே SAI சிறப்பு ஏற்பாடு

ஆசிய போட்டிக்காக ஜப்பானில் கண்டெய்னர் வீடு.. வீரர்கள் வசதிக்காக இந்தியாவிலே SAI சிறப்பு ஏற்பாடு

ஆசிய போட்டிக்காக ஜப்பானில் கண்டெய்னர் வீடு.. வீரர்கள் வசதிக்காக இந்தியாவிலே SAI சிறப்பு ஏற்பாடு

மும்பை: 2026 ஆம் ஆண்டு ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வரும் இந்திய வீரர்களுக்கு மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஜப்பானை அவர்கள் சென்றடைவதற்கு முன்பாகவே, அங்குள்ள தங்குமிட சூழலை இங்கேயே அனுபவித்து உணரும் வகையில் பிரத்யேக வசதிகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ள இந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட வீரர்களும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இங்கு 43 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 71 பிரிவுகளில் 469 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் நடைபெறும் பகுதியில் தங்குமிட பற்றாக்குறை நிலவுவதால், வழக்கமான ஒரே விளையாட்டு கிராமத்திற்குப் பதிலாக பல்வேறுஇடங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நகோயா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'கோஸ்டா செரீனா' என்ற ஆடம்பர உல்லாசக் கப்பல் மிதக்கும் தங்குமிடமாக மாற்றப்பட உள்ளது. இதில் சுமார் 4,600 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்க வைக்கப்பட உள்ளனர். மேலும் 2,400 பேர் கார்டன் பியர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ள கன்டெய்னர் தங்குமிடங்களில் தங்குவார்கள். ஏனைய போட்டிகளில் பங்கேற்பவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

கப்பல்கள் அல்லது ஹோட்டல்களில் தங்குவது இந்திய வீரர்களுக்குப் பெரிய சவாலாக இருக்காது என்றாலும், தற்காலிக கன்டெய்னர் தங்குமிடங்கள் அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். 40x8 அடி அளவிலான சிறிய கன்டெய்னர்கள், நான்கு வீரர்கள் தங்கும் வகையிலான தற்காலிக அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. வழக்கமான அறைகளில் தங்கிப் பழகிய வீரர்களுக்கு, இத்தகைய சிறிய அளவிலான அறைகளில் தங்குவது உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மத்திய விளையாட்டு அமைச்சகம் இதில் தலையிட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்திய வீரர்கள் ஜப்பானுக்குச் சென்ற பிறகு அங்குள்ள தங்குமிட அமைப்பைப் பார்த்து அதிர்ச்சியடையாமல் இருக்க, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI), பஞ்சாபின் பட்டியாலாவில் உள்ள என்எஸ் என்ஐஎஸ் மையம் மற்றும் பெங்களூரு SAI மையத்தில் அதே போன்ற மாதிரி கன்டெய்னர் அறைகளை உருவாக்கியுள்ளது. வீரர்கள் இந்த சிறிய அறைக்குள் தங்கி, அங்குள்ள சூழலைப் புரிந்து கொண்டு, இடவசதிக்கு ஏற்ப தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பட்டியாலா மையத்தில் உள்ள மாதிரி கன்டெய்னர், நான்கு வீரர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு படுக்கைகள், தனிநபர் அலமாரிகள், குளிர்சாதன வசதி , குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் மற்றும் மின்சார கெட்டில் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் வீரர்கள் பழங்களை வெட்டி உண்பதற்கும், எளிய உணவுகளைத் தயாரிப்பதற்கும் ஒரு சிறிய சமையல் பகுதியும், கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய என்எஸ் என்ஐஎஸ் பட்டியாலாவின் துணை இயக்குநர் ஜெனரல் வினீத் குமார், இந்த முயற்சி வெறும் மாதிரி அறையை உருவாக்குவது மட்டுமல்ல, வீரர்கள் ஜப்பானை அடைவதற்கு முன்பே மனதளவில் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதாகும் என்று கூறினார். "வீரர்கள் இத்தகைய தங்குமிடங்களில் தங்கப் போகிறோம் என்பதை இங்கிருந்தே மனதளவில் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் அங்கு சென்றடைந்த பிறகு எவ்வித சவால்களுக்கும் ஆளாகாமல், பயிற்சியில் முழு கவனம் செலுத்த முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சிறப்பான ஏற்பாட்டிற்காக 'சாய்' அமைப்பு புதிய கன்டெய்னர்களை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பேரிடர் காலத்தில் எடைதூக்குதல் மற்றும் தடகள உபகரணங்களைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர்களே இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் புதிய கொள்முதல் செலவுகள் தவிர்க்கப்பட்டு, தற்போது அவை முழுமையான தங்குமிடங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு அமைச்சகம் மற்றும் SAI கூட்டுக்குழு ஜப்பானில் மேற்கொண்ட களஆய்வின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டியாலாவில் உள்ள இந்த மாதிரி அறை வெறும் காட்சிக்கு மட்டும் வைக்கப்படவில்லை. அங்கு நடைபெற்று வரும் தேசிய பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ள குத்துச்சண்டை, எடைதூக்குதல் மற்றும் வாள்வீச்சு வீரர்கள் சுழற்சி முறையில் இந்த அறைகளில் தங்கிப் பழகி வருகின்றனர். இதே போன்ற மற்றொரு கன்டெய்னர் மாணவிகள் தங்கும் விடுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இரவு நேரத்தில் இதில் தங்கி உறங்குவதன் மூலம், ஜப்பானில் தங்களுக்குக் காத்திருக்கும் அதே போன்ற சூழலை நிஜமாகவே உணர்ந்து பழகுகின்றனர். இந்த முயற்சிக்கு வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.