TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Tamil Nadu By Election Result Date 2026: தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்பட மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியானது. காலியாக இருந்த 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
நாளை வாக்கு எண்ணிக்கை:
மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. 80 சதவீதத்திற்கு மேல் இரு தொகுதிகளிலும் வாக்குகள் பதிவாகிய நிலையில், தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
மதுராந்கத்தில் 20 சுற்றுகளாகவும், தாராபுரத்தில் 22 சுற்றுகளாகவும் நடைபெற உள்ளது. காலை 10 முதல் காலை 11 மணியளவிலே முன்னிலை நிலவரம் மூலமாக வெற்றியாளர் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:
துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்படுவதுடன், வாக்கு எண்ணிக்கை வீடியோவாகவும் பதிவு செய்யப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு வேட்பாளர் சார்பிலும் அவரது முகவர் வாக்கு எண்ணும் மையங்களில் இருப்பார்கள்.
வாக்கு இயந்திரம் சீல் பிரிக்கப்படுவது முதல் வாக்கு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் ஒவ்வொன்றும் முகவர் முன்னிலையில் நடைபெறும். வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவிலும் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுடன் அது சரிபார்க்கப்படும்.
தவெக-விற்கு முக்கியமான இடைத்தேர்தல்:
ஆளுங்கட்சியாக தவெக அமைந்த பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த இடைத்தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தும் தவெக-விற்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானது ஆகும். தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். தொகுதிகளை பறிகொடுத்த அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர்.
5 முனைப் போட்டி:
ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி இந்த இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள நிலையில், வெற்றி யாருக்கு? என்பது நாளை தெரிந்து விடும். மதுராந்தகம் தொகுதியில் 28 வேட்பாளர்களும், தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி