📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 04:04 PM

தவெக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை

தவெக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை

தவெக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை - சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும் எனவும், நாங்கள் அரசின் பக்கம் அல்ல, உழைக்கும் மற்றும் ஏழைகளின் பக்கம் மட்டுமே இருப்போம் எனவும் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Published : September 22, 2026 at 5:39 PM IST

சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளில் வரும் அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில், மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், மையூர், சம்பாதிநல்லூர், அத்தியூர், சிதண்டி, பிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்து பேசத் தோழர் சுகந்திக்கு வாக்களிக்க வேண்டும். ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு தவறானது, பிழையானது. எந்த ஒரு காலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையூட்டு பெற்றதில்லை. கையூட்டு வாங்கியதையும் வேடிக்கை பார்ப்பதில்லை.

ஆட்சியை கவிழ்க்கிற சிந்தனை இல்லை

விவிலியத்திலும், இதிகாச புராணங்களிலும் இல்லாத மகத்தான சாதனையை கம்யூனிஸ்ட் கட்சிகள் படைத்திருக்கிறது. த.வெ.க-விற்கு வெளியே இருந்து ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதனையும் கட்சிதான் முடிவு செய்யும். எங்களை பொறுத்த வரை நாங்கள் வெளியே இருந்து தான் ஆதரவு அளிக்கிறோம், கூட்டணியில் இல்லை.

அதே சமயம் ஆட்சியை கவிழ்க்கிற சிந்தனையும் எங்களுக்கு இல்லை. நிர்ப்பந்தம் தருபவர்கள் நாங்கள் அல்ல. அதற்கு மாறாக எங்கள் ஆதரவு தேவைப்பட்டாலும், தேவைப்படாவிட்டாலும் நாங்கள் அரசின் பக்கம் இல்லை. உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் பக்கம் மட்டுமே நாங்கள் இருப்போம்.

மதச்சார்பின்மையில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஏழைகள், உழைக்கிற மக்களின் நலனில் உறுதியாக இருக்க வேண்டும். அதில் தவறும் போது நாங்கள் எதிர்த்துப் போராடுவோம், குரல் கொடுப்போம்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நிதானம் தேவை

தொடர்ந்து பேசிய வீரபாண்டியன், “மதச்சார்பின்மையை கடந்து ஒன்றிய அரசுடன் த.வெ.க நகரும் என்றால், அதுகுறித்து உரிய முடிவு எடுப்போம். கடந்த ஆட்சியில் தொகுதி உடன்பாடு அவ்வளவு தான், உங்களுக்கு வெளியே இருந்த ஆதரவு அவ்வளவு தான். ஆனால், 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டும்.

நாங்கள் அளித்த ஆதரவு ஜனநாயகத்திற்கானது. அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அறிவில் சிறந்தவர்கள், நிதானமாக இருப்பவர்கள், ஒருமுறைக்கு இருமுறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது குற்றச்சாட்டை சொல்லும் போது நிதானத்துடன் சொல்ல வேண்டும்” என்றார்.