பொதுப் பேருந்துகளில் வெளிநாட்டினர்: அமைச்சர் லோக் விளக்கம்
ஜார்ஜ் டவுன்: மலேசியப் பொதுப் பேருந்துகளில் வெளிநாட்டினர் பயணம் செய்வதை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்துள்ளார்.
பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் பொதுப் பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் முறைகேடாக நடந்துகொண்டது குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை (அக்டோபர் 17), வெல்ட் கீயில் உள்ள பணிமனையில் பினாங்கின் மின்சாரப் பேருந்துகளை அமைச்சர் லோக் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்துப் பயணிகளும் விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக நடந்துகொள்ள வேண்டும். முறைகேடான நடத்தை குறித்த புகார்களைப் பேருந்து நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்,” என்று திரு லோக் தெரிவித்தார்.
முன்னதாக, வெளிநாட்டினர் சத்தமாகப் பேசுவது, நடைபாதைகளை மறிப்பது, வரிசையில் நிற்கத் தவறுவது, பேருந்து ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற மறுப்பது போன்ற புகார்கள் சமூக ஊடகங்களிலும் உள்ளூர்ச் செய்திகளிலும் வெளியாகின.
சகப் பயணிகளை மதித்தல், சத்தத்தைக் குறைத்தல், வழியை மறிப்பதைத் தவிர்த்தல், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் ஆகியவற்றைப் பயணிகள் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் வவலியுறுத்தினார்.
ரேபிட் பினாங்கு நிறுவனம் சனிக்கிழமை 15 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் தொடங்கியது. அந்தப் பேருந்துகளில் நடையர்களை எச்சரிக்கும் ஒலியமைப்பும், ஓட்டுநர்களுக்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பும் உள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தொழில்நுட்பம் மட்டுமன்றி, செயல்பாட்டுத் தயார்நிலை, மின்னேற்ற வசதிகள், பராமரிப்பு, பணியாளர் திறன் ஆகியவையும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முதல் கட்டக் கொள்முதல் மூலம் 2027 மார்ச் மாதத்திற்குள் ரேபிட் பினாங்குக்கு 75 மின்சாரப் பேருந்துகளும், ரேபிட் கேஎல்லுக்கு 175 மின்சாரப் பேருந்துகளும் கிடைக்கவுள்ளன.