டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தி 20 நாளில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
சென்னை: ''சென்னையில் டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில், 20 நாட்களில், 5.56 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி விக்டோரிய அரங்கில், டெங்கு கொசு ஒழிப்பு பணியை, நேற்று ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் சமீரன் அளித்த பேட்டி:
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தேங்கும் நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் சிகிச்சை கடந்த இரு மாதங்களாகவே, காய்ச்சல் பாதிப்புகளை, மாநகராட்சி தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. டெங்கு பாதித்தவர்களில் 95 சதவீதம், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாமல், வீடுகளிலேயே சிகிச்சை பெற்று குணமடைகின்றனர்.
மீதமுள்ள 5 சதவீதம் மட்டுமே, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை வளாகத்தை துாய்மைப்படுத்த மாநகராட்சி உடனடியாக உதவுவதுடன், குடிநீர் சுத்திகரிப்பு வசதியும் செய்து தரப்படும்.
சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு, 2,500 பேர் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக பணியாளர்கள் நியமித்து, 3,690 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தினசரி, 80 முதல் 100 வீடுகளுக்கு நேரில் சென்று, நன்னீரில் வளரும், 'ஏடிஸ்' வகை கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
தீவிர நடவடிக்கை பொதுமக்கள், வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டை சுற்றியுள்ள உடைந்த பாட்டில்கள், கப்புகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.
சென்னையில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில், 20 நாட்களில், 5.56 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
எந்த பணியையும், மாநகராட்சி தாமதமாக செய்யவில்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த, மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
44 டன் கழிவுகள் அகற்றம்
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், வீடுகளில் தேங்கி கிடக்கும் பழைய சோபாகள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2025 அக்., மாதம் முதல் நேற்று முன்தினம் வரை, 3,696 நபர்களிடம் இருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 1,175 டன் பழைய பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளன.
நேற்று முன்தினம், 90 வீடுகளில் இருந்து, 44.27 டன் பழைய சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டு, கொடுங்கையூரில் எரியூட்டப்பட்டு உள்ளன. இந்த சேவையை பெற, 1913 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என, மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
86,489 தெருநாய்களுக்கு
வெறிநாய்க்கடி தடுப்பூசி
திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மாதவரம், ராயபுரம் ஆகிய ஐந்து மண்டலங்களில் அனைத்து இடங்களிலும் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, அம்பத்துார், அண்ணாநகர், ஆலந்துார் மண்டலங்களில் பணி நடந்து வருகிறது. இதுவரை, 86 ஆயிரத்து 489 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.