📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 21, 2026 05:30 PM

தன்னை விட 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த 'அயலி' நாயகன்.. சத்தமே இல்லாமல் முடிந்த சீக்ரெட் காதல்!

தன்னை விட 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த 'அயலி' நாயகன்.. சத்தமே இல்லாமல் முடிந்த சீக்ரெட் காதல்!

சென்னை: சின்னத்திரை உலகில் ரீல் ஜோடிகளாக வலம் வந்து, பின்னர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேரும் நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில், தற்போது சின்னத்திரையின் பிரபல நட்சத்திரங்களான நடிகர் ஆனந்த் செல்வனும், நடிகை சியாமந்தா கிரணும் தங்களது பல வருடக் காதலைத் திருமண பந்தமாக மாற்றி புது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று இவர்களது திருமணம் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருவீட்டு உறவினர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் தடபுடலாக நடைபெற்றது.

ரகசியக் காதல்: கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆயுத எழுத்து'. இந்தத் தொடரில் ஆனந்த் செல்வனும், சியாமந்தாவும் இணைந்து நடித்தனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. எனினும், கடந்த 7 வருடங்களாகத் தங்களது காதலைப் பொதுவெளியிலோ அல்லது சோசியல் மீடியாவிலோ இவர்கள் வெளிப்படுத்தாமல் மிகவும் ரகசியமாகவே வளர்த்து வந்தனர். எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல், சரியான நேரத்தில் தங்களது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி, இப்போது அதிகாரப்பூர்வமாகத் தம்பதிகளாக இணைந்துள்ளனர்.

வில்லி டூ ஹீரோயின்: நடிகை சியாமந்தா கிரண் சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான ஒரு முகம். பனிவிழும் மலர் வனம், சுமங்கலி, அண்ணா போன்ற பல்வேறு முன்னணித் தொடர்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் மற்றும் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரங்களில் நடித்துத் தனது போல்டான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மறுபுறம், நடிகர் ஆனந்த் செல்வன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நினைத்தாலே இனிக்கும்' தொடர் மூலம் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தற்போது அதே ஜீ தமிழில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் 'அயலி' மெகா தொடரில் நாயகனாக, 'சிவா' என்ற லீட் ரோலில் நடித்துப் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார்.

7 வயது வயது வித்தியாசம்: நடிகர் ஆனந்த் செல்வனுக்கு தற்போது 31 வயது என்றும், நடிகை சியாமந்தா கிரணுக்கு 38 வயது என்றும் சொல்லப்படுகிறது. தன்னை விட 7 வயது மூத்த பெண்ணான சியாமந்தாவை ஆனந்த் செல்வன் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். "காதலுக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில் இணைந்துள்ள இந்த புதுமணத் தம்பதியினருக்குச் சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை வாரி வழங்கி வருகின்றனர்!