கொடுத்த வாக்குறுதியை மீறி தவெக அரசு செயல்படுகிறது
கொடுத்த வாக்குறுதியை மீறி தவெக அரசு செயல்படுகிறது - நயினார் நாகேந்திரன்
மதுபான பார்களில் தவெக நிர்வாகிகள் நேரில் சென்று மாமுல் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
Published : June 21, 2026 at 5:09 PM IST
திருநெல்வேலி: ஊழலற்ற நிர்வாகம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் கீழ்நிலையில் இருந்தே ஊழல் தொடங்கி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள சங்கீத சபா வளாகத்தில் பாரதி சேவா சங்கம் சார்பில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "சித்தர்கள் வாழ்ந்த ஆன்மிக பூமியான இந்தியாவில் உருவான யோகக் கலை, இன்று உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2014-இல் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஐ.நா. சபையில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. யோகா பயிற்சி செய்வதால் நுரையீரல், இருதயம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்" என்றார்.
சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதில்லையே என்ற கேள்விக்கு, "சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை முழுமையாக நடைபெறவில்லை என்பது வருத்தமான செய்தி. தேர்தலுக்கு முன்பு பல வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால், தேர்தலுக்கு பின்பு எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
முதல்வர் விஜய் மேடைக்கு மேடை ஏராளமாக பேசினார். ரஞ்சிதமே ரஞ்சிதமே என பாடினார்; பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடினார்; பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாய் தருவதாக கூறினார். ஆனால், 1,000 ரூபாய்தான் வழங்கி உள்ளனர்.
மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவில்லை. 6 சிலிண்டர்கள் இலவசம் என்று கூறினார்கள்; அதையும் செய்யவில்லை.
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை முழுமையாக செய்யப்படும் என சொன்னார்கள். அதுவும் செய்யப்படவில்லை. யாருக்கு ஓட்டு போட்டோம் என்று மக்களுக்கு தெரியவில்லை; முதல்வர் விஜய்க்கும் எப்படி முதல்வரானோம் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 207 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 40-க்கும் மேற்பட்டவை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என்றார்.
நெல்லையில் உள்ள மதுபான பார்களில் தவெக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக வந்த செய்தி குறித்து பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "ஊழலற்ற அரசு என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஊழல் கீழிருந்தே தொடங்கி இருக்கிறது. மதுபான பார்களில் நேரில் சென்று மாமுல் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பார்களில் வசூல் நடைபெறுகிறது.
புதிய அரசுக்கு ஆறு மாதம் அவகாசம் என்பது நிர்வாகத்திற்கு மட்டுமே வழங்கலாம்; ஆனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு அவகாசம் வழங்க முடியாது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் உள்ள குறைபாடுகளால் பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்து முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களுக்கு தெரியுமா? என்று தெரியவில்லை. அரசு நிர்வாகம் பற்றி முதல்வருக்கு நூறு சதவீதம் தெரியும் என்றால் முதல்வர் வாயைத் திறந்து பேச வேண்டியதுதானே? தமிழக அமைச்சரவையில் ஆதவ் அர்ஜுனா பவர் சென்டராக செயல்படுகிறார். அவர் சொல்வதையே அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் கேட்கின்றனர்.
நீட் தேர்வினால்தான் வசதி வாய்ப்பற்ற சாதாரண மாணவர்களும் இன்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிகிறது. நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை சிலர் தூண்டுகின்றனர்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி விவகாரத்தைப் போலவே மத்திய அரசு இதில் உரிய நீதி வழங்கும்" என்று தெரிவித்தார்.