தமிழகம் முழுதும் 36,000 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகத்தில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 36,000 சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி தினமான, செப்., 14ம் தேதி ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
சென்னையில், 1,562 விநாயகர் சிலைகள்; கோவையில், 2,230; விழுப்புரத்தில், 1,780; திருவள்ளூரில், 892; செங்கல்பட்டில் 628; காஞ்சிபுரத்தில், 252 என, மாநிலம் முழுதும், 36,000க்கும் அதிகமான சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த சிலைகளை விசர்ஜனம் செய்ய, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இடங்கள் அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டன. அதேபோல, விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் வழியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகளுடன், விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று, மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நீர் நிலைகளில் கரைத்தனர். சென்னையில் பட்டினப்பாக்கம் கடல் உட்பட பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள், கிரேன் உதவியுடன் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
அத்துடன், நகரப்பகுதிகளில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளையும், பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளையும், பெரிய விநாயகர் சிலைகளுடன் எடுத்துச் சென்றனர். சிலர் தனிப்பட்ட முறையில், சிலைகளை எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைத்தனர்.