தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் இன்று சிஜேபி காலவரையற்ற போராட்டம்
புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லியில் இன்று காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து சிஜேபி சார்பில் கடந்த ஜூன், ஜூலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதன்காரணமாக மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். இந்த சூழலில் எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அக்டோபர் 10-ம் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்படும் என்று சிஜேபி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 38,000 வீரர்கள் டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 13 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கிழக்கு ரயில்வே நிர்வாகமும் சில விரைவு ரயில்களை ரத்து செய்திருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் பேருந்துகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதி விடுதிகள், ஓட்டல்களில் தங்கியிருப்போர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. டெல்லியை ஒட்டிய அண்டை மாநிலங்களின் எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. டெல்லியின் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்கும் சிஜேபி தொண்டர்களை தடுப்பு காவலில் வைக்க திருமண மண்டபங்கள், மைதானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. முன்வரிசை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரின் உடைகளில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. சிஜேபி அமைப்பின் 10,000 நிர்வாகிகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
போராட்டத்துக்கு அனுமதி இல்லை
டெல்லி காவல் துறை இணை ஆணையர் நுபுர் பிரசாத் நேற்று கூறும்போது, “போராட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பே மனு அளிக்க வேண்டும். ஆனால் மிக குறுகிய காலத்தில் சிஜேபி மனு அளித்திருக்கிறது. சட்டம், ஒழுங்கு காரணமாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
டெல்லியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் என்று பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. ஜந்தர் மந்தரின் பல்வேறு பகுதிகளில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்தில்யாரும் ஒன்றுகூட வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.