📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 10, 2026 09:03 AM

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தின்கீழ் பூந்தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைந்து இணைப்பு பேருந்து சேவையை மேம்படுத்தவுள்ளது. இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், புதிதாக அமையவுள்ள பூந்தமல்லி - போரூர் - வடபழனி வழித்தடத்தில் பயணிகளுக்கான தடையற்ற பயணத்தை உறுதி செய்ய, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

பூந்தமல்லி - போரூர் - வடபழனி வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களை நகரின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் எளிதாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதுடன், மெட்ரோ ரெயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கு இடையே சிரமமின்றி பயணிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ளதால், பயணிகள் பேருந்துகளை எளிதில் பயன்படுத்த முடியும்.

பூந்தமல்லி - போரூர்- வடபழனி வழித்தடத்தில் மொத்தம் 11 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது. இந்த மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக இருமார்க்கங்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் கீழ்கண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் - பயண நடைகளின் எண்ணிக்கை

பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ - 1,793

பூந்தமல்லி பேருந்து நிலையம் மெட்ரோ - 5,155

பூந்தமல்லி அரசு மருத்துவமனை மெட்ரோ - 4,423

கரையான்சாவடி மெட்ரோ - 4,423

குமணன்சாவடி மெட்ரோ - 3,766

காட்டுப்பாக்கம் மெட்ரோ - 1737

அய்யப்பன்தாங்கல் மெட்ரோ - 2,522

தெள்ளியகரம் மெட்ரோ - 2,711

போரூர் பைபாஸ் மெட்ரோ - 2,639

போரூர் மெட்ரோ - 3,320

வடபழனி மெட்ரோ - 1,130

ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலும் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்து நிறுத்தங்களின் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் பயணத் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநகரப் போக்குவரத்துக் கழகமும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். அதேபோல், ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலும் பேருந்து சேவைகளை எளிதில் அணுகுவதற்காகத் தனிப்பட்ட பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்துவதற்கான தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சென்னையில் வசிக்கும் மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.