📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 11:05 PM

தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை: மின்வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்

தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை: மின்வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின்தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு தமிழக அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின்தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் பெரும் இடைவெளி காணப்படுவதுதான் மின்வெட்டுக்கு காரணம். இதை சமாளிக்க முதலில் 2,000 மெகாவாட்டும், பின்னர் 4,500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகும் மின்வெட்டும், மின்தடையும் தொடர்வது ஏன்?

மின்வெட்டு அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது. அதனால், தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.