📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 09:04 PM

கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; மின்வாரிய அதிகாரிகள் மீது சரமாரி புகார்..

கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; மின்வாரிய அதிகாரிகள் மீது சரமாரி புகார்..

கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; மின்வாரிய அதிகாரிகள் மீது சரமாரி புகார்..

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மின்வாரிய அதிகாரிகள்மீது சரமாரி புகார் தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி முதல் தொடர் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அந்தந்த மின்வாரிய அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர். அப்போது அவர்கள் முறையான பதிலளிக்காமலும், மின்தடையை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், மாணவர்கள், நோயாளிகள், முதியோர், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தூக்கமின்றி தவிப்பதாகவும் எனவே பெண்கள் உள்பட அனைவரும் இது குறித்து நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகள்மீது சரமாரி புகார் தெரிவித்து கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்தனர். இதில், சிறுபுழல்பேட்டையில் உள்ள 230 கிலோவாட் துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருவதாகவும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

*திருவேற்காட்டிலும் அடிக்கடி மின்வெட்டு; நடவடிக்கை இல்லை எனக் குற்றச்சாட்டு

திருவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகத்தில் நிலவும் பிரச்சினையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக, திருவேற்காடு சன்னதி தெருவில் மாலை நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளில், ஒரு மின் இணைப்பு கோயிலின் மின் தேவைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தினமும் மாலை நேரங்களில் கோயிலில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பயன்பாட்டுக்கு வரும்போது, சன்னதி தெருவில் அமைந்துள்ள கடைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் மாலை நேரங்களில் கடைகளில் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்படுவதுடன், வீடுகளில் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதிலும் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதில் குறிப்பாக, மாலை நேரங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கடைகளுக்கு வரும் சூழலில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள், குழந்தைகள், முதியோர் மின்தடையால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மின்சார விநியோகத்தில் உள்ள குறைபாட்டைக் கண்டறிந்து, வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மின் இணைப்புகள் மற்றும் மின் சுமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் வலியுறுத்துகின்றனர். அதன்படி புகார்கள் மீது மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சன்னதி தெரு மக்களின் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்களா? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.