திருமாவளவனை முதல்வராக்க முயற்சி
விஜய்யால் ஆட்சியமைக்க முடியாது என்பதால், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கேட்கலாம் என்றுதான் இருந்தோம். மே 8-லேயே இதை செய்தியாளர் சந்திப்பில் கூறினேன். தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல். த.வெ.க ஆதரவுடன் கூட்டணித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயன்றோம். உடன்பாடு இல்லாததால் திருமாவளவனை முதல்வராக்க முயன்றோம். இதில் தி.மு.க, பா.ஜ.க.,வின் பின்னணி எதுவும் இல்லை என மதுராந்தகத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசியதாவது:
திமுக - அதிமுக கூட்டணி வதந்திக்கு மறுப்பு:
"அதிமுக தலைமையை கொச்சைப்படுத்தும் வகையில் விஜய் பேசி வருகிறார். திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. இதுகுறித்து கடந்த மே 8-ஆம் தேதியே நான் தெளிவான விளக்கம் அளித்துவிட்டேன்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க விஜய்யிடம் ஆதரவு கோர முடிவு செய்திருந்தோம். எங்கள் கட்சியின் 25 எம்.எல்.ஏ-க்களை விஜய் தனது பக்கம் இழுத்ததால், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க விஜய்யிடம் ஆதரவு கேட்கும் முயற்சியை மட்டுமே நாங்கள் மேற்கொண்டோம்."
திருமாவளவனை முதல்வராக்க முயற்சி:
"இந்த விவகாரத்தில் நாங்கள் திமுகவுடன் பேசியதாகக் கூறுவதும், இதன் பின்னணியில் பாஜக இருந்ததாகக் கூறுவதும் முற்றிலும் தவறானவை. இதில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மேற்கொண்ட முயற்சிக்கு சிலர் சம்மதிக்காத சூழலில், திருமாவளவனை முதல்வராக்கவும் நாங்கள முயற்சி செய்தோம்."
"தவெக தனது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஏமாற்றி ராஜினாமா செய்ய வைத்தது. அதேபோல மதிமுக எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் பக்கம் இழுக்க அழைப்பு விடுத்தனர்; ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தனது ஆட்சியை காப்பாற்ற விஜய் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால், அதனை மறைப்பதற்காகவே திமுக - அதிமுக கூட்டணி என்று பொய்யான தகவலைப் பேசி வருகிறார். திருச்சியில் பேசும்போது இருவரும் ஒன்றாக வருவார்கள் என்றார். தற்போது திமுகவும் அதிமுகவும் தனித்தனியாகத் தானே நிற்கிறது? எனவே, இந்த விவகாரத்தில் விஜய் தான் உண்மையான களவாணி" என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.