மகளிருக்கான 'வெற்றிப் பயணம் திட்டம்' நாளை தொடக்கம்
மகளிர் 'வெற்றிப் பயணம் திட்டம்' நாளை தொடக்கம் - தவெக தேர்தல் வாக்குறுதி முதல் நிறைவேற்றம் வரை முழு விவரம்
வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைய உள்ளனர்.
Published : October 1, 2026 at 6:54 PM IST
- BY எஸ்.ரவிச்சந்திரன்
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய், நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் குறித்து விரிவாக பாரப்போம்.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டு, அவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமன்றி பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர், மாணவியர், திருநங்கையர் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் மகளிர் பொருளாதாரம் மேம்பாடு அடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக தலைவர் ஜோசப் விஜய், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவற்றில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்த வாக்குறுதி முக்கியமானதாக இருந்தது.
பெண்கள், தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து விதமான அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல், விரைவுப் பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் மகளிர் மற்றும் மாணவிகள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமான அறிவிப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்டார். முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடரில், முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் 24 அன்று, சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது, "தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இந்த அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக "வெற்றிப் பயணம்" என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும்" என்று அறிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்அக்டோபர் 2 முதல் pic.twitter.com/UbmjaElVi0
இந்நிலையில், 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அவர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம், அக்டோபர் 2 முதல் தொடக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பயனடைய போகும் 84.32 லட்சம் மகளிர்
தமிழ்நாடு அரசின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அவற்றில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தொலைதூர பேருந்துகளை மட்டுமே இயக்கி வருகிறது.
மீதமுள்ள 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். தற்போது நடைமுறைக்கு வரும் வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலம், மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை, மாநகர பேருந்துகள், எக்ஸ்பிரஸ் பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதியில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 12,692 அரசு பேருந்துகள், இந்த வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைய உள்ளனர்.
மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம், மாநிலம் முழுவதும் மகளிர் எளிதில் அணுகும் பொது போக்குவரத்து வசதி கிடைக்கும். மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ, பயணங்களின் எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் மகளிர் ஒரு முறை 80 முதல் 90 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி பயணிக்கலாம். அதன்படி, சென்னையில் இருந்து ஒருவர் திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்றால், அரசுப் பேருந்துகளில் மேல்மருவத்தூர் வரை சென்று, அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய முடியும். இந்த திட்டம், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வேலைக்கு அல்லது கல்லூரிகளுக்கு செல்லும் மகளிருக்கு அதிகளவில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவு
வெற்றிப் பயணம் திட்டத்தை செயல்படுத்தும்போது, அரசுக்கு ஆண்டுதோறும் 6,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைக்கு சமூகநலத்துறையின் மூலமாக 2025-26-ம் ஆண்டில் 3,599 கோடி ரூபாயும், 2026-2027-ஆம் ஆண்டில் 3,999 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியாருக்கு பாதிப்பா?
தமிழ்நாட்டில் மொத்தம் 21,198 அரசு பேருந்துகள் 7,660 தனியார் பேருந்துகள், 5,000 தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மகளிர் வெற்றிப் பயணம் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, சென்னை தவிர பிற மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
குறிப்பாக மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பறிகு, பெண்கள் அதிக அளவில் தனியார் பேருந்துகளில் செல்வதை தவிர்த்து விட்டு அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். வெற்றிப் பயணம் திட்டம் அமலுக்கு வந்த பிறகு சுமார் 90 கிலாே மீட்டர் வரை பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றால், தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது குறையும். இதனால் தங்களின் தொழில் பாதிப்புக்குள்ளாகும். எனவே, தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்யு் போது அவர்களுக்கான கட்டணத்தை அரசு மானியமாக தருவதற்கு முயற்சிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைமுறை சிக்கல் உள்ளதா?
வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பெண்களுக்கு டிக்கெட் கொடுப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒரு பெண் பயணி, சாதாரண பேருந்தில் பயணிக்கும்பாேது, அவர் எங்கிருந்து எங்கு செல்கிறார் என்று டிக்கெட்டில் குறிப்பிட தேவையில்லை. ஆனால் டீலக்ஸ், விரைவு பேருந்துகளில் பெண் பயணியின் பயண விவரத்தை குறிப்பிட வேண்டும்.
இந்த திட்டத்தில் பெண் பயணி, நிறுத்தச் சொல்லும் இடத்தில், ஓட்டுநர் பேருந்தை நிறுத்த வேண்டும். இதனால் மற்ற பயணிகள் பேருந்து மெதுவாக செல்வதாக கூறி சிரமங்களை எதிர்கொள்வார்கள்.
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 30 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெற்றிப் பயணம் திட்டத்தினால் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பேருந்துகளை இயக்குவற்கான செலவு அதிகரித்து போக்குவரத்து நிறுவனங்கள் சிரமத்தை சந்திக்கும்" என்றார்.
மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தில், இப்படி சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், இத்திட்டம் பெண்களுக்கு பயன் அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.