📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 08:04 PM

திமுகவுக்கு வழக்கு... அதிமுகவுக்கு பெட்டி.... தவெக குறித்து உதயநிதி விமர்சனம்

திமுகவுக்கு வழக்கு... அதிமுகவுக்கு பெட்டி.... தவெக குறித்து உதயநிதி விமர்சனம்

தாராபுரம்: திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடுவதும், அதிமுக எம்எல்ஏக்களுக்கு பெட்டி கொடுப்பதையும் தான் முதல்வர் விஜய் செய்து வருவதாக தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து ஓட்டு சேகரித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

அவர் பேசியதாவது; இந்த ஆட்சி அமைந்தது முதல் முதல்வர் என்ன செய்கிறார் என்றால், திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடுவதும், அதிமுக எம்எல்ஏக்களுக்கு பெட்டி கொடுப்பதையும் தான் செய்து வருகிறார். எம்எல்ஏக்களை தூக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படித்தான் அதிமுகவில் இருந்து 7 எம்எல்ஏக்களை தூக்கி விட்டனர். இப்ப இருக்கும் ஆளும் கட்சி வேட்பாளருக்கு தான் நீங்கள் ஏற்கனவே ஓட்டு போட்டீங்க. மீண்டும் அவங்களுக்கு ஓட்டு போட்டால், உங்களுக்காக சட்டசபையில் பேசுவார்களா?

40 நாட்கள் நடந்த சட்டசபையில் நாங்கள் படாதபாடு பட்டோம். தொகுதி பிரச்னையையும் குறையையும் தான் சட்டசபையில் பேசுவார்கள். ஆனால், முதல்வர் வாயை திறந்து பேசியதாக சரித்திரமே கிடையாது. தண்ணீ வரலை என்று சொன்னதற்காக என் மீது வழக்கு போட்டு விட்டார்.

சட்டசபையில் கேள்வி கேட்டால் எதிர் கேள்வி கேட்கலாம். ஆனால், சட்டசபையில் ஆளுங்கட்சியினர் பாட்டு பாடுகிறார்கள். நாங்கள் பாட்டு வகுப்புக்கா செல்ல முடியும். அமைச்சர்கள், சபாநாயகர் பாடுகிறார்கள்.

மதுராந்தகத்தில் பேசியதைத் தான் தாராபுரத்திலும் முதல்வர் பேசுவார். அவர் பேசிய 30 நிமிடத்தில் 32 முறை திமுக என்றே சொல்லுகிறார். அவருக்கு வேறு எதுவுமே தெரியாது. சட்டசபையில் ஒரு எம்எல்ஏ காதல் தோல்வியைப் பற்றி பேசுகிறார். நான் ஆடிப்போய்ட்டேன். இந்த திட்டம் எல்லாம் முதல்வர் வைத்திருக்கிறாரா? என்று நினைத்து விட்டேன்.

ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 மகளிர் உதவித்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை செய்வேன் என்று சொன்னாரே, செய்தாரா? எங்கு பார்த்தாலும் மின்வெட்டு, அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மின்வெட்டு தான். முதல்வர் தொகுதியிலேயே மின்சாரம் இல்லை.

அதிமுக தொண்டர்கள் உழைப்பில் ஜெயித்து, 10 நாளில் கட்சி மாறி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். சட்டசபையில் இவர்கள் பாட்டு தான் பாடுவார்கள். அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்கனா, அவங்க மீண்டும் பொட்டி வாங்கிட்டு கட்சி மாறி விடுவார்கள். போன தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.