ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டதில் பச்சைப் பொய் சொல்கிறார் விஜய்… உண்மையை அம்பலப்படுத்தும் இபிஎஸ்
ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டதில் பச்சைப் பொய் சொல்கிறார் விஜய்… உண்மையை அம்பலப்படுத்தும் இபிஎஸ்
செங்கல்பட்டு: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று இரண்டாவது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். முதலில் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட எல்.எண்டத்தூரில் திரண்டிருந்த மக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது;
“இந்த தேர்தல் எதற்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியும். பெட்டி மாறிப்போச்சு. அதனால் வந்த தேர்தல். நீங்கள் கால்கடுக்க நின்று அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று வாக்களித்தீர்கள். வெற்றி பெற்றவர் உங்களுக்கு உழைக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக குதிரை பேரத்தின் வழியாக பெட்டி வாங்கினார். அவர்தான் நம்மை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
நம் தொண்டர்கள், கூட்டணியினர் பாடுபட்டு, மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற வைத்தால், குதிரை பேரத்தில் ராஜினாமா செய்து அங்கு போய் அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் சென்றுவிட்டனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த தண்டனை கொடுங்கள். எவ்வளவு பெரிய துரோகம் இது. மக்களுக்காக உழைப்பதற்கு அதிமுக ஒரு வாய்ப்பு கொடுத்தும், அதை மதிக்காமல் சென்றுவிட்டார். ஓட்டுப்போட்ட மக்களையும் மதிக்கவில்லை, வெற்றி பெற வைத்த நிர்வாகிகளையும் மதிக்கவில்லை.
நேற்று தவெக தலைவர் விஜய் அவரை ஆதரித்து பிரசாரம் செய்தார். வீர வசனம் பேசினார். யாரை வைத்துக்கொண்டு..? அந்த தூய்மையானவரை வைத்துக்கொண்டு… ஜனநாயகப் படுகொலை இது. இதைவிட வெட்கக் கேடானது எது இருக்க முடியும். நாம் பெற்ற குழந்தை, நாம் வெற்றி பெற வைத்தோம், மாற்றுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்றால் நம் கட்சியினர் மனம் எப்படி வெதும்பும் என்று எண்ணிப்பாருங்கள்.
இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தலாக இந்தியாவே பார்க்கிறது. எந்தக் கட்சியிலும் கட்சி மாறியதும் சீட் கொடுத்தது இல்லை, தவெக கொடுத்திருக்கிறது, அவருக்கு தக்க பாடம் கொடுக்க வேண்டும். நேற்று விஜய் வீர வசனம் பேசினார், குழந்தைகளை சீரழித்தவர்களை நான் தான் கைது செய்தேன் என்றார், அது பச்சைப் பொய். ஏற்கனவே திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போட்டனர். கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது, மீண்டும் ஜூலை 20 விசாரணைக்கு வந்தது, அப்போதும் தவெக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்கிறார். 3-8-2026 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சொன்னபோதும் வாய்தா கேட்டனர். நீதிபதி பொறுத்துக்கொள்ள் முடியாமல் கைது செய்தாக வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார். அதன்பின்னர் தான் கைது செய்தனர்.
ஆக யார் காலம் தாழ்த்தியது? இரண்டரை மாதம் வாய்தா வாங்கி காப்பாற்றியது தவெக அரசு. ஆனால் பச்சை பொய் சொல்கிறார். மக்களிடம் அனுதாபம் பெற நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கலைமாமணி பிரகாஷ் முப்பெரும் விழாவில் இரண்டு தவெக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவருடைய நிகழ்ச்சியில் வணிகவரித்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டனர். உணவுத்துறை அமைச்சர் பேசும்போது, ’’எம்.வீரமணி எனது குடும்ப நண்பர் என்கிறார். அப்படியெனில் உண்மை வெளிவந்துவிட்டது. குற்றவாளியைப் பாதுகாக்கும் ஆட்சி இது. வேறொரு கட்சி மீது பழியை சுமத்தி இந்த ஆட்சியில் தான் பாதுகாப்பு இருப்பதுபோல அனுதாபம் தேடி பச்சை பொய் சொல்வது வரலாற்றில் இதுதான் முதல்முறை.
இந்த மதுராந்தகம் விவசாயிகள் நிறைந்த பகுதி, கைத்தறி தொழிலும் உள்ளது. தேர்தல் நேரத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்று அறிவித்தார். செய்தாரா? விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். தேர்தல் நேரத்தில் ஒன்று பேசுவது, வென்ற பின்னர் வேறொன்று பேசுவது.
அதிமுக ஆட்சி இருந்தபோது ஒரே ஐந்தாண்டில் பயிர்க்கடன் இருமுறை தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். இப்போது விவசாயிகளுக்கு கடுமையான மின்வெட்டு. மின் கட்டணம் எப்படி கணக்கிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. தவறு நடந்தால் அடுத்த மாதம் கழித்துக்கொள்ளலாம் என்கிறார் அமைச்சர். நிர்வாகத்திறமையற்ற அரசு இது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரு சம்பவம். வண்டலூர் அருகே கண்டிகை அரசு பள்ளியில் மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடூரம் நடந்துள்ளது. அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். இந்த ஆட்சி அமைந்தபின் 250 கொலை, 300 மேற்பட்ட பாலியல் சீண்டல்கள். இதற்கெல்லாம் முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்? கூட்டுப்பாலியல் சம்பவம் நடக்கிறது தடுக்க முடியவில்லை, முதல்வர் கவனம் செலுத்தவில்லை. காவல்துறை மானியம் நடந்தபோது முதல்வர் குறிப்பெடுத்து பதில் கொடுக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே பேசாமல், பாதியில் ஓடிபோய்விட்டார். நான் பேசி முடிக்கும்வரை வரவில்லை, நான் 50 நிமிடம் பேசினேன். ஆட்சியின் அவலம் பற்றி பேசினேன். எதற்கும் பதிலில்லை.
அன்றைக்குத் தான் போய்விட்டார், திங்கள் அன்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு பதிலும் இல்லை. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகிறார், இது நாட்டுக்குத் தேவையா? திமுக எதிர்த்து குரல் கொடுத்தது, இப்படியே பேசிவிட்டு முடித்துவிட்டனர். மக்கள் பிரச்னையை பேசத்தான் மாமன்றம். மக்கள் பிரச்னைக்கு பதில் கொடுக்க வக்கில்லாத முதல்வர். நீங்கள் எதுக்கு எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கிறீர்கள், உங்கள் பிரச்னையை சட்டமன்றத்தில் பேசி தீர்வு காணத்தானே? ஆனால் பேசவும் ஆளில்லை, பதில் சொல்லவும் ஆளில்லை. ஏதோ விபத்தில் ஆட்சி அமைத்துவிட்டனர், மனசார மக்கள் ஓட்டுப்போடவில்லை.
இந்த ஆட்சி ரீல் மற்றும் ரீல்ஸ் தான். சினிமாவில் சட்டமன்றக் காட்சி போலதான் நிஜத்தில் நடந்தது. சட்டமன்றம் பட்டிமன்றம் ஆகிவிட்டது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நடந்தால் 7 மணி நேரம் வெட்டிப்பேச்சு. திமுகவும் தவெகவும் ஒருவரையொருவர் திட்டுவார்கள், நாங்கள் வேடிக்கைப் பார்க்க வேண்டும். இது போல மோசமான அரசு இந்தியாவில் எங்குமில்லை. தவெக நிறைய அறிவிப்பு கொடுத்தது, எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 31 ஆண்டுகாலத்தில் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். உங்கள் ஆட்சியில் ஒரு திட்டமாவது சொல்ல முடியுமா? பெரிய திட்டம் எதுவுமில்லை.
வாக்குறுதி கொடுத்தார், உரிமைத் தொகை 2500 ரூபாய் என்று சொல்லி கொடுக்கவில்லை, முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை. வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம், விசைத்தறி கைத்தறி ஆண்டுக்கு 30 ஆயிரம் எல்லாம் கொடுப்பதாகச் சொன்னார். எதுவும் இல்லை. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்?
2 லட்சத்து 48 ஆயிரம் கோடி மின்சாரத்துறையில் கடன், 72 ஆயிரம் கோடி போக்குவரத்து துறையில் கடன், 10 லட்சம் கோடி தமிழகத்துக்கு கடன். துட்டு இருந்தால்தான் செய்ய முடியும். திமுக அரசு கஜானாவை காலிசெய்துவிட்டு சென்றது, இந்த அரசும் கஜானாவை காலிசெய்ய இந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்குகிறார்கள். 4 மாதத்தில் 40 ஆயிரம் கோடி வாங்கிவிட்டனர். கடனெல்லாம் உங்கள் தலையில் தான் விடியும். வரி போட்டுத்தான் கட்டணும். கடந்த ஆட்சியில் வரி போட்டார்களே அதே போல்தான். தவெக ஆட்சி அமைந்ததும் வரியெல்லாம் திரும்பப்பெறுவோம் என்று சொன்னார், செய்தாரா? எல்லாம் பொய். பொய் பேசுவதற்கு விஜய்க்கு நோபல் பரிசு கொடுப்பது பொருத்தமாக இருக்கும். மக்கள் மத்தியிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
மதுரை சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது, அமைச்சர் இருந்த விழாவிலே கரண்ட் கட். ஆனால் அமைச்சரோ மின்வெட்டு அல்ல, மின்பற்றாக்குறை என்று ஏமாற்றுகிறார். நேற்று விஜய், 1931ல் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது, அதன்பின்னர் எடுக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் எடுப்போம் என்றார். விஜய் அவர்களே அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைத்தேன். தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அதிமுக ஆட்சியில் தான் முதல்முறையாக அரசாணை வெளியிடப்பட்டது.
லண்டன் பயணம் எதுக்குப் போனார் என்று உங்களுக்குத் தெரியும். முதலீடு ஈர்க்க போகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அங்கு போனதும் முதலில் ஒரு படம் வந்தது, அது என்னவென்று உங்களுக்கு தெரியும். இங்கு இந்தியாவில், தமிழகத்தில் 32 இடங்களில் இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை அங்கு அழைத்து ஒப்பந்தம் போடுகிறார். சென்னையிலே ஒப்பந்தம் போட்டிருக்கலாம், இன்பச் சுற்றுலா போக வேண்டும் என்ற ஆசையில் போய்விட்டு வந்திருக்கிறார்.
அங்கு போய் கார் பந்தயத்தை துவக்கிவைத்தார், அதுவா முக்கியம்? காலில் செருப்புக் கூட இல்லாமல் இருக்கிறார்கள் பலர். கார் பந்தய மைதானம் அமைக்கப் போகிறாராம், பொருளாதாரத்தில் வளர்ந்த பின்னர் அமைக்கலாம். சைக்கிள் இல்லாமல் மக்கள் இருக்கும் நாட்டில் கார் பந்தயத்துக்கு மைதானம் தேவையா? வருடத்துக்கு 78 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் எதற்கு? சட்டமன்றத்திலே விஜய் அமர்வதில்லை அப்புறம் எதுக்கு புதுசு? அவர் வீட்டுக்கு பக்கத்தில் கட்டுவாராம். முதல்வருக்கான அறை போதவில்லையாம், கடல் காற்று நேரடியாக பட வேண்டுமாம். அதனால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒரு அறை தயார் செய்கிறார்கள். இதுக்கு 10 கோடி செலவு. இப்படிப்பட்ட காஸ்ட்லி முதல்வர் தேவையா? அண்ணா முதல் ஸ்டாலின் வரை எல்லோரும் பணியாற்றிய அறை அது. அது போதாதாம்.
இந்த இடத்தேர்தல் திணிக்கப்பட்டது என்று கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே சொல்கிறார்கள். ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து வெற்றி பெற வைக்கத் துடிக்கிறார். அவருக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள். நம் வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்…” என்று கேட்டுக்கொண்டார்.