📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 11:03 PM

திமுக சீரமைப்பில் மா.செ.,க்கள் ஆதிக்கம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

திமுக சீரமைப்பில் மா.செ.,க்கள் ஆதிக்கம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

- நமது நிருபர் -

தி.மு.க.,வில், கட்சி அமைப்புகளை சீரமைப்பதில், தங்கள் ஆதரவாளர்களுக்கு, மாவட்ட செயலர்கள் பதவி வழங்குவதாக புகார் எழுந்துள்ளதால், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வை சீரமைக்க, 19 குழுக்களை ஸ்டாலின் அமைத்தார். அவை அளித்த பரிந்துரையின்படி, மாவட்டம், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம் என, தமிழகம் முழுதும் ஒரே அளவிலான கட்சி அமைப்புகளை உருவாக்க, தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், முன்னாள் அமைச்சர்களும், மூத்த மாவட்ட செயலர்களும், சீரமைப்புக்குழு பரிந்துரைத்தபடி ஒன்றியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகங்களை பிரிக்கவில்லை. தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை புதிய பதவிகளுக்கு நியமிக்கும் வகையில், கட்சியின் அமைப்புகளை பிரித்து வருகின்றனர்.

இதற்கு, சில மாவட்ட பொறுப்பாளர்கள் உடன்பட்டுள்ளனர்; சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., தலைமைக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு, சீரமைப்பு குழுவில் இடம் பெற்ற, முன்னாள் அமைச்சர்கள் சிலரை அழைத்து, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மேலும், 'சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகே, மாற்றங்களை ஏற்க வேண்டும்' என, மாவட்ட செயலர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கட்சியின் ஒவ்வொரு அமைப்புக்கும், வாக்காளர் எண்ணிக்கை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வின் ஒன்றிய அமைப்பில், 30 ஆயிரம் ஒட்டுகள் இருக்குமாறு பிரிக்க வேண்டும். சென்னையில் 40 ஆயிரம் ஓட்டுகள்; பிற மாநகர பகுதிகளில் 30 ஆயிரம் ஓட்டுகள்; நகரத்திற்கு, 40 ஆயிரம் ஓட்டுகள் என இருக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி வட்டங்கள் 10 ஆயிரம் ஓட்டுக்கள் எனவும் பிற மாநகராட்சி வட்டங்கள் 5 ஆயிரம் ஓட்டுகள் என்ற வகையிலும் பிரிக்க வேண்டும். இதை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க., தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.