📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 01, 2026 05:04 PM

தெமாசெக் மத்திய கிழக்கில் புதிய அலுவலகங்களைத் திறக்கிறது

தெமாசெக் மத்திய கிழக்கில் புதிய அலுவலகங்களைத் திறக்கிறது

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், மத்திய கிழக்கில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு இடையிலும் அது அங்குப் புதிய அலுவலகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

சவூதி அரேபியத் தலைநகர் ரியாதிலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள அபு தாபியிலும் அடுத்த ஆண்டின் முற்பாதியில் தெமாசெக் புதிய கிளைகளைத் தொடங்க எண்ணியிருக்கிறது. இந்த அலுவலகங்கள், தெமாசெக்கின் சில முதலீட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் முக்கிய நடுவங்களாகவும் விளங்கும்.

கத்தாரிலும் மத்திய கிழக்கின் மற்றச் சந்தைகளிலும் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து முதலீட்டு வாய்ப்புகளைத் தேடத் தீவிரமாய்ச் செயல்படவுள்ளதாக நிறுவனம் புதன்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் தனக்கும் தனது முதலீட்டு நிறுவனங்களுக்கும் நீண்டகால அடிப்படையில் கணிசமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெமாசெக் கருதுகிறது. மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற விரிவான வட்டாரங்களிலும் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான அதன் ஆற்றலை இந்த உத்திபூர்வ விரிவாக்கம் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

“தேசிய வளர்ச்சி, பன்முகத்தன்மைத் திட்டங்களால் உந்தப்பட்டு, இந்த வட்டாரம் பரவலான பொருளியல் மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

“தெமாசெக்கின் உலகளாவிய முதலீட்டு அனுபவம், கட்டமைப்புகள், கூட்டணி அடிப்படையிலான அணுகுமுறை, அதோடு அதன் முதலீட்டு நிறுவனங்களின் ஆழ்ந்த துறை சார்ந்த அறிவு ஆகியவை இவ்வட்டாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்,” என்று அது சுட்டியது.

மத்திய கிழக்கு என்பது தெமாசெக்கின் உலகளாவிய கட்டமைப்பின் முக்கியப் பகுதி என்று தெமாசெக் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா கூறினார்.

இவ்வட்டாரத்தின் முன்னுரிமைகளுக்கும் தெமாசெக் தற்போது கவனம் செலுத்திவரும் துறைகளுக்கும் இடையே வலுவான ஒற்றுமை இருப்பதாக அவர் சொன்னார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“மத்திய கிழக்கு முழுதிலும் குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார் ஆகியவற்றில் பங்காளித்துவம், கூட்டு முதலீடுகள், முதலீட்டு நிறுவனங்கள் மூலம் எங்களின் உறவுகள் பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அவற்றை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்,” என்று திரு தில்ஹான் தெரிவித்தார்.

இந்த விரிவாக்கம் இயல்பான அடுத்தகட்ட நகர்வு என்றும் இணைந்து வளர்வதற்கேற்ற வலுவான பங்காளித்துவத்தை உருவாக்க இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.