📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 01, 2026 03:03 PM

சிங்கப்பூரில் பானக் கலன் காசு திரும்பப் பெறும் புதிய தளம்

சிங்கப்பூரில் பானக் கலன் காசு திரும்பப் பெறும் புதிய தளம்

சிங்கப்பூரில், பானக் கலன்களைத் திரும்பத் தரும் திட்டத்தின்கீழ் இயந்திரத்தில் போடப்பட்ட கலன்களுக்கான காசைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்வோருக்கு உதவ புதிய மின்னிலக்கத் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் காசைத் திரும்பப் பெற விண்ணப்பித்தோரின் காத்திருக்கும் காலம் 30 நாள்களிலிருந்து 10 நாள்களுக்குக் குறையும்.

பானக் கலன்களைத் திரும்பத் தரும் திட்டம் நடைமுறைக்கு வந்து ஆறு மாதங்களுக்குப்பின் மின்னிலக்கத் தளம் அறிமுகம் காண்கிறது.

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் அல்லது தகரக் கலன்களில் விநியோகிக்கப்படும் அனைத்து பானங்களும் திட்டத்தின் வைப்புத்தொகை முத்திரையையும் 10 காசு சின்னத்தையும் கொண்டிருக்கவேண்டும்.

வியாழக்கிழமை (அக்டோபர் 1) முதல் 150 மில்லிலிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை உள்ள பானங்களுக்கு அது பொருந்தும்.

தகுதிபெறும் காலிக் கலன்களை அவற்றுக்கான உரிய இயந்திரங்களில் போட்டு வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறலாம்.

வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்ளும் பயனீட்டாளர்களுக்காகத் தொகையைத் திரும்பத் தரும் புதிய மின்னிலக்கத் தளம் உருவாக்கப்பட்டதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பும் திட்டத்தை நிர்வகிக்கும் பிசிஆர்எஸ் நிறுவனமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

இயந்திரத்திலிருந்து பெறப்படும் சேவைச் சீட்டில் உள்ள கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம் அல்லது சேவைச் சீட்டின் படத்தை returnright.sg/refund என்ற தளத்தில் பதிவேற்றலாம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதற்குமுன் பானக் கலன்களுக்கான காசைத் திரும்பப் பெற முடியாதவர்கள் அதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பவேண்டிய நிலை இருந்தது.

பரிவர்த்தனைக்குரிய விவரங்கள் கூடியமட்டும் நிரப்பப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள், முழுப் பெயர், வங்கிப் பெயர், வங்கிக் கணக்கின் எண் ஆகிய தகவல்களை வழங்கவேண்டும்.

அனைத்தும் சரிபார்க்கப்பட்டபின் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பத்து நாள்களுக்குள் காசு போடப்படும்.

தொடக்கக் கட்டமாக வடக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள எஸ்ஜி மறுசுழற்சி இயந்திரங்களில் புதிய மின்னிலக்கத் தளம் செயல்படும். பின்னர், கட்டங்கட்டமாக அது தீவின் பிற பகுதிகளில் உள்ள இயந்திரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.