தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய கடன்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய கடன் - விஜய் அரசு என்ன செய்ய வேண்டும்? | Long Read
புதிய அரசில் அனைவரும் புதியவர்கள் என்ற சூழலில், முதல்வர் தனது அலுவலகத்தில் ஒரு பொருளாதார ஆலோசகரை நியமித்துக்கொள்வது பல வகைகளில் பேருதவியாக இருக்கும்.
அந்த அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை தரும் பொருளாதார ரீதியிலான செய்திகள் என்ன என்று பார்ப்போம். தனி நபருக்கு, ஒரு நிறுவனத்திற்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்ல, நிதி நிர்வாகம் சரியாகக் கையாளப்படவில்லை என்றால், அரசுகளுக்கும் நிதி நெருக்கடியும், நிதிச் சுமையும் ஏற்படும் என்பதுதான் இந்த வெள்ளை அறிக்கை மக்களுக்குச் சொல்கிற முக்கியச் செய்தியாக இருக்கிறது.
தேர்தல் காலங்களில் மக்களை ஈர்ப்பதற்காக பல்வேறு கட்சிகள் பல்வேறு திட்டங்களை, அதிலும் குறிப்பாக நிதிச் சுமையை அதிகரிக்கும் திட்டங்களை அறிவிக்கின்றன. ஆட்சி அமைந்தவுடன் அந்தத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், நிதிச் சுமை, கடன் சுமை அளவுக்கு மேல் போகிறது. நிதிச் சுமையால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் பயனாளிகளைக் குறைப்பது அல்லது திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருப்பது அல்லது காலம் தாழ்த்துவது போன்ற விஷயங்களில் பயன்களை எதிர்பார்த்த மக்களும் அதிருப்தி அடைகின்றனர்.
நிதிச் சுமையை அதிகப்படுத்தும் பல திட்டங்களின் வெளிப்பாடாக ஒவ்வொரு தனி நபர் மீதும் விழுந்துள்ள சராசரி கடன் அளவு அதிகரித்து வருவதைத் தான் பிரதானமாக இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தனி நபர்கள் அரசின் கடனைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது என்றாலும், இந்த நெருக்கடியைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக அந்தக் கடன் இருக்கும். கர்நாடகாவில் தற்போதைய ஆளும் கட்சி தேர்தல் நேரத்தில் ஐந்து முக்கிய வாக்குறுதிகளைத் தந்ததன் வெளிப்பாடாக, தற்போதுள்ள அரசு அவற்றை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் திணறுவதைப் பார்க்கிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், திட்டங்களில் பல மாறுதல்களைச் செய்து வருவதையும் பார்க்கிறோம். அதன் காரணமாக, மாநில வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் அளவற்ற, எல்லையற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், அவற்றை முழுமையாகச் செயல்படுத்த பெரும்பாலான அரசுகளுக்கு நிதி ஆதாரம் போதுமானதாக இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள என்பது வெள்ளை அறிக்கையின் முக்கிய சாராம்சம்.
அரசாங்கத்தின் கடன் பற்றிய விவாதம் வரும்போது மாநிலங்கள் கடன் பெறுவது சரியா தவறா என்ற கேள்வியும் இயற்கையாகவே எழும். அரசுகள் கடன் பெறுவது தவறல்ல. ஒரு தனி நபரோ, ஒரு நிறுவனமோ கடன் பெறுவது லாப நோக்கத்துக்காகவும், அவர்களின் சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் இருக்கும்.
ஆனால், அரசுகளின் கடமைகள் என்பது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இருப்பதால் மக்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் கடன் வாங்குவது என்பது தவறல்ல. ஆனால், அந்தக் கடன் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். இந்த வெள்ளை அறிக்கை மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வாங்கப்பட்ட கடன் பெரும்பாலும் நிர்வாக செலவுகளுக்காக, அதாவது அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், முன் வாங்கிய கடன்களுக்கான வட்டி போன்றவற்றிற்கு பெரும் பகுதி செலவிடப்படுகிறது என்பதுதான்.
இது போன்ற நிர்வாக செலவுகளுக்கே கடன் பெற்றுத்தான் நடத்த வேண்டும் என்ற நிதி நெருக்கடி நிலை உண்மையிலேயே கவலை கொள்ள வேண்டிய விஷயம். நூறு ரூபாய்க் கடன் வாங்கினால் அதில் பெருமளவு நிர்வாக செலவுகளுக்குச் செலவிடப்படும் போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த திட்டங்களுக்கோ அல்லது உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கோ, இருக்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கோ மிகக் குறைந்த அளவே செலவு செய்யப்படும் பட்சத்தில், அதுபோன்ற கடன்கள் வீண் விரயம்தான் என்பதை உணர வேண்டியது அவசியமாக இருக்கிறது.
மக்களின் நலத்திட்டங்களைப் பூர்த்தி செய்யும் கடமை அரசுக்கு இருப்பது போலப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவது, இருக்கும் வசதிகளை மேம்படுத்துவதும் அரசின் கடமைதான். மக்கள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாகப் பலன் கொடுக்கும் திட்டங்கள் என்றால், பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு நிரந்தர பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் அதிகரிக்கும் தனிநபர் வருமானம் மூலம் பெறுவார்கள் என்பதையும் அரசுகள் மற்றும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் அரசுகள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டதைக் காட்டிலும் இனி வரக்கூடிய காலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத, கணிக்க முடியாத பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு தேர்ந்த பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதல் மூலமாக, நிதி நெருக்கடி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிதி ஆதாரத்தைப் பெருக்குவது போன்ற பல விஷயங்களுக்குத் தீர்வுகள் காண முயற்சி செய்யலாம். பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என இரண்டையும் சம நிலையில் வைத்து நிதி நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.
நிதி நெருக்கடியைத் தளர்த்த பலதரப்பட்ட நிதி நிர்வாக சீர்திருத்தங்களைத் தயங்காமல் செயல்படுத்த வேண்டும். முக்கியமாக அரசு செலவினங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு முக்கிய சீர்திருத்தம். ஏற்கனவே வாங்கப்பெற்ற கடன்களில் பெரிய அளவு மாற்றங்களைச் செய்ய முடியாது என்றாலும், புதிதாக வாங்க இருக்கும் கடன்களைச் சரியான முறையில் கையாள வேண்டிய கட்டாயத்தில் இந்த அரசு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல மக்கள் சார்ந்த திட்டங்களின் பயனாளிகளை மறு ஆய்வு செய்து உரிய மக்களுக்கு மட்டுமே அந்தத் திட்டங்கள் சென்றடைய வேண்டும். தேவையற்ற பயனாளிகளை நீக்கும்போது நிர்வாக ரீதியாக நிதி நெருக்கடியைச் சரி செய்யலாம்.
மேலும், புதிய திட்டங்கள் அமலுக்கு வரும்போது சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டும் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். இரண்டாவதாக, நிதி ஆதாரத்தைக் கூட்டும் ஒரு அவசியம் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பன்மடங்காக அதிகரித்து வரும் நிர்வாக செலவினங்கள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய சூழல் மற்றொருபக்கம் கட்டுக்கடங்காத கடன் அளவு மற்றும் வாங்கிய கடன்களுக்கான வட்டிச் செலவு என்று அரசின் நிதி சூழலை மேலும் நெருக்கடிக்குள்ளாகும் நிலை உள்ளது.
தற்போதைய அரசின் மிக முக்கியமான நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த முன்னெடுப்பாக நிதி ஆதாரத்தைக் கூட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கின்றனர். வெள்ளை அறிக்கையில் அதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரிந்தது. மாநில வரிகளை உயர்த்துவதைத் தவிர நிதி ஆதாரத்தை உடனடியாகக் கூட்டுவது என்பதும் சாத்தியமில்லை.
நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மாநிலங்களின் கூட்டுப் பொருளாதார வளர்ச்சியே என்பதுதான். அதனால் மத்திய அரசிடமிருந்து கூடுதல் வளர்ச்சி நிதியைப் பெறுவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும். தேவைப்பாட்டால் உலக அளவிலான மேம்பாட்டு வங்கிகளின் நிதி உதவிகளையும் பெற முயலவேண்டும். பொருளாதாரக் கட்டமைப்பைத் தரம் உயர்த்தினால் மட்டுமே உலக மட்டும் உள்நாட்டு முதலீட்டாளர்களைப் பெருமளவில் ஈர்க்க முடியும். இப்போதுள்ள முதலீட்டுப் போட்டி சூழலில் பல மாநிலங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்க முந்திக் கொண்டிருக்கின்றன.
இங்கு பல்வேறு துறைகளில், முக்கியமாக, கட்டுமானம், கனிம வளம் போன்ற துறைகளில் அரசுக்கு வந்து சேரவேண்டிய நியாயமான வருவாயை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய அரசின் மதுபானத் துறையின் சீர்திருத்தங்கள், அதாவது பல டாஸ்மாக் கடைகளை மூடுவது மற்றும் தனியார்மயமாக்குதல் என்பன நல்ல முன்னெடுப்பகளாக இருந்தாலும் அவற்றின் மூலம் ஏற்படவிருக்கும் வருவாய் இழப்பை வேறு எந்த வழியில் ஈடுகட்ட முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
புதிய அரசின் மீது மக்களின் அதீத எதிர்பார்ப்புகள் உள்ளன என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். அதன் காரணமாக, ஆட்சியாளர்களுக்கு மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேர்தல் வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யும் தலையாய கடமை ஒரு சுமையாக இருந்தாலும், இந்த அரசு நிதி நெருக்கடியை படிப்படியாகக் குறைத்து நிதி நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, நிதி ஆதாரத்தை வெவ்வேறு வழிகளில் பெருக்க முயற்சி செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டால் அவர்களுக்கு இந்த வெள்ளை அறிக்கை ஒரு வெற்றி அறிக்கையாக மாறும்.