எதிர்க்கட்சி விவாதங்கள் இருட்டடிப்பு: சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எழுதியுள்ள கடிதம்:
சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என, முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடந்து வரும் கவர்னர் உரை மீதான விவாதம், நேரலை செய்யப்படுவதில்லை.
மேகதாது அணை கட்டுவதை கண்டித்து, கடந்த 19ம் தேதி, முதல்வர் கொண்டு வந்த அரசின் தீர்மானத்தின் மீதான விவாதங்கள், நேரலை செய்யப்பட்டன. அதன் பின், உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் உரை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், அது இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஆளும் கட்சியினருக்கு வேண்டிய விவாத காட்சிகள் மட்டும், 'எடிட்' செய்யப்பட்டு, மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது, மக்களையே அவமானப்படுத்துவதாகும்; சட்டசபை மாண்பை குலைப்பதாகும்.
மேலும், ஊடகங்களுக்கு செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறை செய்திகளை அளிப்பதும், 'நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்' என சொல்வதும், பாசிச நடவடிக்கை.
சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் அவமானப்படுத்தும் செயல் நடந்துள்ளது. சட்டசபை நடவடிக்கைகளை நேரலை செய்ய, தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், மக்கள் அளித்த ஓட்டுக்கே மரியாதை இன்றி போய் விடும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.