📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 24, 2026 03:03 PM

தேர்தல் கமிஷன் விவகாரம்: காங்., பொய்ப் பிரசாரத்தை வெளுத்து வாங்கிய பா.ஜ.,

தேர்தல் கமிஷன் விவகாரம்: காங்., பொய்ப் பிரசாரத்தை வெளுத்து வாங்கிய பா.ஜ.,

​புதுடில்லி: 'தலைமை தேர்தல் கமிஷனரும் மற்ற தேர்தல் கமிஷனர்களும் விவாதித்து முடிவெடுப்பது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையே தவிர, கருத்து வேறுபாடு கிடையாது,' என காங்கிரசுக்கு பா.ஜ., பதிலடி தந்துள்ளது.

​தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் கிளப்பிவிட்ட சர்ச்சைக்கு பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளரும் எம்.பி.,யுமான சம்பித் பத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

​மக்களால் நிராகரிப்பு:

டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சம்பித் பத்ரா கூறியதாவது: லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் 'இண்டி' கூட்டணி கட்சிகள், தேர்தல் கமிஷன் மீது அவநம்பிக்கையை விதைக்கப் பார்க்கின்றன. தற்போது தேர்தல் கமிஷன் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியையும் (எஸ்.ஐ.ஆர்.,) குறிவைத்து பொய்களை பரப்பி வருகின்றன.

மூன்று கமிஷனர்களும் தங்களுக்குள் எந்தக் கருத்தையும் பரிமாறிக் கொள்ளாமல், எல்லாவற்றுக்கும் தலையசைத்தால், 'சர்வாதிகாரம்' என்பார்கள். ஆனால், சட்டப்படி விரிவாக விவாதித்து, ஆலோசனைகளை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்து ஒருமித்த முடிவை எட்டுவது ஆரோக்கியமான ஜனநாயக செயல்பாடு என்பதை காங்., புரிந்துகொள்ள வேண்டும்.

​வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பொய். வாக்காளர் பெயர் நீக்கம் அதிகமாக நடந்ததாகக் கூறப்படும் மேற்கு வங்கத்தின் 20 சட்டசபைத் தொகுதிகளில், திரிணமுல் காங்கிரஸ் 13 இடங்களிலும், பா.ஜ., 6 இடங்களிலும், காங்., 1 இடத்திலும் தான் வென்றுள்ளன. முறைகேடு நடந்திருந்தால் இது சாத்தியம் கிடையாது. ​வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடைமுறையின் சட்டப்பூர்வ தன்மையை உச்ச நீதிமன்றமே பலமுறை உறுதி செய்துள்ளது.

வரலாற்றுச் சான்று:

​காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்தல் கமிஷன் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தேர்தல் கமிஷனர்களாக பதவி வகித்த பலருக்கு, ஓய்வுக்குப் பின் கவர்னர் பதவி, ராஜ்யசபா எம்.பி., பதவி, மத்திய அமைச்சர் பதவிகளை வழங்கி குளிர்காய்ந்தது காங்கிரஸ் தான்.

​எம்.எஸ்.கில் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ​ஆனால், பா.ஜ., ஆட்சியில் வெளிப்படைத்தன்மையுடன் கொலீஜியம் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் வித்திட்ட காங்கிரசுக்கு தேர்தல் ஆணையத்தை பற்றிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.