📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 06, 2026 04:03 AM

“டாஸ்மாக் பிரச்சினைக்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்”

“டாஸ்மாக் பிரச்சினைக்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்”

அமைச்சர் விக்னேஷ்

தவெக கோவை மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, பேரூரில் இன்று (செப்.5) நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் கே.விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள், முதல்வர் விஜய் ஆட்சியில் வரம் வாங்கிக் கொண்டு பிறக்கும் குழந்தைகள். அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் கடைகளை திறக்க ஆரம்பித்துவிட்டனர்.

பணிக்கு வராத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது. தவறு யார் செய்தாலும் தவறுதான். அரசு தவறு செய்தாலும், அமைச்சர் தவறு செய்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

டாஸ்மாக் பிரச்சினைக்கு திமுக, அதிமுக தான் காரணம். இன்றைக்கு டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிலை ஏற்பட்டதற்கு திமுகவும் அதிமுகவும் தான் காரணம். கடந்த காலங்களில் இந்த பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது இவ்வளவு தூரம் வந்திருக்காது.

இது ஓர் உதாரணம் தான். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் பிரச்சினை என்பது 200 படிகள் கொண்டது. அதில் நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளையும் ஏறி, டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என்று அவர் கூறினார்.