📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 09, 2026 02:00 PM

டாஸ்மாக் நிறுவனத்துக்கு ‘சப்ளை’ செய்யும் மதுபான உற்பத்தியாளர்களுக்கு பெட்டிக்கு ரூ.90 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயம்

டாஸ்மாக் நிறுவனத்துக்கு ‘சப்ளை’ செய்யும் மதுபான உற்பத்தியாளர்களுக்கு பெட்டிக்கு ரூ.90 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயம்

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்துக்கு வழங்கும் ஒவ்வொரு மதுபான பெட்டிக்கும் ரூ.90 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த மதுபான உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் அதை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வழங்கும்போது கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி செலுத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிக்கப்படும் ஒவ்வொரு மதுபான பெட்டிக்கும் கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம் உற்பத்தியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகள் 9 ஒரு லிட்டர் பாட்டில்கள், 12 ஃபுல் (750 மில்லி) பாட்டில்கள், 24 ஆஃப் (375 மில்லி) பாட்டில்கள், 48 குவாட்டர் (180 மில்லி) பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளுக்கு தலா ரூ.90 கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல பீர் வகைகளில் 650 மில்லி அளவுள்ள 12 பாட்டில்கள் கொண்ட பெட்டிக்கு ரூ.40-ம், 750 மில்லி அளவுள்ள 12 ஒயின் பாட்டில்கள் கொண்ட பெட்டிக்கு ரூ.20-ம் கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் விலை உயராது:

இந்த கட்டண நிர்ணயம் உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்கும் போதே இணைக்கப்படும். மேலும் இந்த கூடுதல் கட்டணம் காரணமாக மதுபானங்களின் விற்பனை விலை உயராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது உற்பத்தியாளர்கள் வழங்கும் மது வகைகளுக்கு 58 சதவீதம் கலால் வரியும், 220 சத வீதம் மதிப்புக் கூட்டு வரியும் மாநில அரசுக்கு செலுத்துகின்றனர்.

இந்த புதிய நடைமுறை வாயிலாக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முன்னதாக ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.40 முதல் 80 வரை உற்பத்தியாளர்களிடம் கட்சிக்காரர் கள் பெற்று வந்தனர்.

இதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகை நேரடியாக அரசுக்கு வந்து சேரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.