📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 03:03 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பட்டாசு ஆலைவெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பட்டாசு ஆலைவெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 3–ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூனம்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில், ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சந்தனபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று கூனம்பட்டி பகுதியில் ‘கரிஷ்மா ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள ஏழு வெவ்வேறு அறைகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம்போல் பட்டாசுத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.2 அறைகள் தரைமட்டம்:அப்போது, அங்கு சக்கரம் ரக பட்டாசு உற்பத்தி செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலைச் கட்டிடத்தின் 2 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதுடன், அருகில் இருந்த மேலும் மூன்று அறைகளும் பலத்த சேதமடைந்தன.இந்த விபத்து குறித்து அய்யம்பட்டி சிலோன் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 55) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் காளிராஜ் (வயது 50) உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.