ரீல்ஸ் மோகம்: வாழ்க்கையைப் பணயம் வைக்கலாமா?
தன்னிடம் உள்ள பணம், நகைகளைக் காணொளிப் பதிவாக்கிச் சமூக ஊடகத்தில் பதிவேற்றிய பெண் யூடியூபரின் வீட்டில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமூக ஊடகப் புகழ் வெளிச்சத்துக்கும் விருப்பக் குறியீடுகள் பெறுவதற்கும் எல்லை மீறிய காணொளிகளைப் பதிவிடும் போக்கு பலரிடம் அதிகரித்திருப்பது ஆய்வுக்குரியது.
யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அதிகப் பார்வைகளைப் பெறவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பலரும் வித்தியாசமான முறையில் காணொளிகளைப் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது
நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், தனது வீட்டில் உள்ள பணத்தை வாரி இறைத்துக்கொள்வது, பணத்தால் அபிஷேகம் செய்வது, தங்க ஆபரணங்களைக் காட்டுவது எனக் காணொளிகள் வெளியிட்டு வந்தார்.
இந்தச் சூழலில் செப்டம்பர் 24 அன்று அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவருடைய வீட்டில் திருட்டு நடந்துள்ளது. 118 பவுன் தங்கம், வைர நகைகள், ரூ.50,000 ரொக்கம் களவு போயிருந்தன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.