📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 13, 2026 12:03 AM

ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட் அபாரம்.. 41 பந்துகளில் 85 ரன்கள் குவிப்பு.. 5 சிக்சர் விளாசல்

ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட் அபாரம்.. 41 பந்துகளில் 85 ரன்கள் குவிப்பு.. 5 சிக்சர் விளாசல்

ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட் அபாரம்.. 41 பந்துகளில் 85 ரன்கள் குவிப்பு.. 5 சிக்சர் விளாசல்

விசாகப்பட்டினம்: வினூ மன்கட் கோப்பை தொடரில் டெல்லிக்கு எதிரான லீக் போட்டியில், கர்நாடக யு-19 அணியின் கேப்டனும் ராகுல் டிராவிடின் மகனுமான அன்வய் டிராவிட் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் டெல்லி அணியை 198 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி அபாரமாக வீழ்த்தியது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது. நான்காவது வீரராகக் களமிறங்கிய விக்கெட் கீப்பர்-பேட்டர் அன்வய் டிராவிட், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

கர்நாடக அணியின் தொடக்க வீரர் நிதீஷ் ஆர்யா 109 பந்துகளில் 111 ரன்களும், துருவ் கிருஷ்ணன் 51 பந்துகளில் 103 ரன்களும் விளாசினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆர். ரோஹித் ரெட்டி 70 ரன்கள் எடுத்தார். துருவ் கிருஷ்ணனுடன் இணைந்து 3-வது விக்கெட்டிற்கு அன்வய் டிராவிட் 10.1 ஓவர்களில் 130 ரன்கள் சேர்த்தது அணியின் மிகப்பெரிய ஸ்கோருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

419 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணி, 41.1 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக்கின் மகனும், டெல்லி அணியின் கேப்டனுமான ஆரியவீர் சேவாக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் விக்கெட் கீப்பர் அபிராஜ் ககன் சிங் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார்.

கர்நாடக தரப்பில் பந்துவீச்சில் அசத்திய தியான் எம். ஹிரேமத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நடப்பு வினூ மன்கட் கோப்பை தொடரில் அன்வய் டிராவிட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சண்டிகர் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் அவர் 62 பந்துகளில் 102 ரன்கள் குவித்து சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.