“ராகுல் காந்தியை சந்திப்பதால் முதல்வர் விஜய்க்கு நேரம்தான் வீண்”
கோவை: “ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே நாட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.10) கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்கள் தீர்ப்பை வரவேற்கிறோம். 1989-க்கு பிறகு, இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்று வருகிறது. அதன்படி, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தவெக வெற்றி பெற்றுள்ளது.
4 மாதங்களுக்கு முன் வேறு கட்சியில் வெற்றி பெற்று, ராஜினாமா செய்து மீண்டும் வேறு கட்சியில் சேர்வது ஆரோக்கியமான ஜனநாயகமாக பார்க்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இனிமேலாவது அவர்கள் சுயநலமாக இருக்காமல், மக்கள் பிரச்சினைகளை பார்க்கட்டும்.
வரலாறு தெரியாமல் சிலர் பாஜக குறித்து பேசுகின்றனர். 1998-ல் அதிமுகவுடனும், 1999-ல் திமுகவுடனும் பாஜக கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி செய்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ள செல்வாக்கை இடைத்தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளனர். தவெக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்மையை தான் பேசுகின்றனர். இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து கட்சிகளின் ஓட்டு சதவீதத்தை கணிக்க முடியாது.
4 மாத தவெக அரசில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 5 மணி நேர மின்தடை ஏற்படுகிறது. வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகின்றனர். இது எதிர்காலத்தில் தமிழகத்தின் நிதி நெருக்கடி அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும்.
செவிலியர் போராட்டம் தொடர்பாக தவெக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எடுத்தனர், ஆளும்கட்சியாக வந்தபோது ஒரு நிலைப்பாடு எடுக்கின்றனர்.
எஸ்ஐஆர் முறையால் வெற்றி பெற்றுள்ளதாக கேரளா காங்கிரஸை சேர்ந்த ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் மூலம் 12 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதில் 2 கோடி உயிரிழந்துள்ளனர். அவர்கள் சொர்க்கத்திலும், நரகத்திலும் உள்ளனர். அவர்களை அழைத்து ஓட்டு போட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். அவரைத்தான் அனுப்பி அவர்களை அழைத்து வர சொல்ல வேண்டும்.
ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். முதல்வரை சந்திக்கிறார். இதனால் முதல்வருக்குதான் நேரம் வீண். முதல்வராவது மக்கள் மத்தியில் நடிக்கிறார். ராகுல் காந்திக்கு அரசியல்வாதியாக நடிக்கவும் தெரியவில்லை. தடுப்புகள் மீது ஏறி நிற்கும் அவரின் மனநிலை எப்படியிருக்கும் பாருங்கள். ராகுல் காந்தி இந்தியாவை விட்டுச் சென்றாலே, இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது.
பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து அதில் பயணிக்கிறார். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடி-யில் பிரைன் சென்டர் ஆராய்ச்சியை தொடங்கி வைக்கிறார். பள்ளி நிகழ்விலும் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் மாலை திரும்புகிறார்” என்று அவர் கூறினார்.