பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்; எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-நமது நிருபர்-
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப் பட்டு, சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார். 1,200 கோடி ரூபாய் மதிப்பில் தலைமை செயலகம் கட்டப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தைக் கைவிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று (அக் 05) ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, 'இந்தச் செலவை எவ்வாறு பண விரயம் என்று கூற முடியும்; ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டடம் கட்ட வேண்டாம் என்று அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு எங்கிருந்து வருகிறது' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர் எந்தவிதமான ஆய்வு நடத்தாமலும், காரணங்கள் ஏதும் இல்லாமலும், விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டனர். பிறகு மனுதாரரின் விருப்பத்தின் பேரில் வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.