📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 21, 2026 05:00 AM

படிக்க சிறக்க: கணினி விளையாட்டுக்கு விடை கொடுத்த ஆருத்

படிக்க சிறக்க: கணினி விளையாட்டுக்கு விடை கொடுத்த ஆருத்

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், ஓய்வு நேரத்தில் கணினி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ஆருத்.

11 வயதான அவனுக்குப் பெற்றோர், கடந்த மூன்று மாதங்களுக்குமுன் புதிய கணினி ஒன்றை வாங்கித் தந்தனர்.

அந்த நேரத்தில், அவன் பள்ளி நண்பர்களிடையே கணினி விளையாட்டு ஒன்றும் பிரபலமாக இருந்தது.

நாள்தோறும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆருத் கணினி விளையாட்டில் ஈடுபட்டான்.

அதனால், மந்தமானவனாகவும் அடிக்கடி எரிச்சல்படுபவனாகவும் ஆருத் மாறத் தொடங்கினான்.

அவனுக்குப் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஆர்வம் குறைந்தது.

பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரும் ஆருத்தின் வகுப்பாசிரியருமான திரு திலீபன் இதனைக் கவனித்தார்.

ஒருநாள் வகுப்பு முடிந்த பின்னர், திரு திலீபன் ஆருத்திடம் பேசத் தொடங்கினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“உன் வயதில் சிறார் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். நீயோ சற்று மந்தமாகவே இருக்கிறாயே!” என்று அவர் கூறினார்.

ஆருத்திற்குச் சற்று எரிச்சல் ஏற்பட்டது. ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

அவனது எண்ணங்களைப் புரிந்துகொண்ட திரு திலீபன், சிரித்தபடியே, “கவலைவேண்டாம். உனக்கு நான் தொல்லை தரமாட்டேன். எனக்கும் உன்னைப் போல அவ்வப்போது மந்தமும் எரிச்சலும் ஏற்படுவதுண்டு. அப்போது நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்றார்.

“நீங்கள் என்ன செய்வீர்கள் ஆசிரியரே?” என ஆருத் கேட்டான்.

“மெதுவோட்டம் செய்வேன். குறைந்தது மெதுநடையாவது மேற்கொள்வேன். கணினி விளையாட்டுக்குப் பதிலாக இதனைச் செய்துபார்,” என்றும் அவர் கூறினார்.

“கணினி விளையாட்டைத்தான் வகுப்பில் இருக்கும் நண்பர்களும் விளையாடுகிறார்களே?” என்று எண்ணி வருந்திய ஆருத், ஒன்றும் பேசவில்லை.

அவனை உற்றுநோக்கிய ஆசிரியர், “நீ உன் நன்மைக்காக இதைச் செய். மற்றவர்கள் சொல்வதை ஒருபுறம் தள்ளிவை. நீ உனக்காக உடற்பயிற்சி செய்,” என்று கூறினார்.

மறுநாள் பள்ளி முடிந்து ஆருத், தன் வீட்டுக்கு அருகே மெதுவோட்டத்தில் ஈடுபட்டான்.

எவ்வளவு சலித்தாலும் களைத்தாலும் உடற்பயிற்சியைக் கைவிடக் கூடாது எனத் திரு திலீபன் சொன்னதை ஆருத் நினைவுகூர்ந்தான்.

தளராமல் தொடர்ந்து மெதுவோட்டம் மேற்கொண்ட ஆருத்திற்கு நாளுக்கு நாள் புத்துணர்ச்சி ஏற்பட்டது.

நண்பர்கள் சொல்வதை எப்போதும் கேட்காமல், சுய சிந்தனையை அவன் மெல்ல வளர்த்துக்கொண்டான்.

உடல் வலிமை, மனமகிழ்ச்சி, நேரத்தைத் திட்டமிடும் திறன் எனப் பல்வேறு நற்பண்புகள், இந்த ஒரு நல்ல பழக்கத்திலிருந்து அவனுக்கு விளைந்தன.