பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: வண்டலூர்
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்: வண்டலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கண்டிகையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாணவி ஒருவருக்கு மர்ம நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்டு சர்ச்சை எழுந்தது.
அந்த மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக, தாழம்பூர் போலீஸார், கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் எதிரொலியாக நேற்று கண்டிகை, நல்லம்பாக்கம், மேலக்கோட்டையூர் பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சக மாணவர்களின் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கண்டிகை பகுதியில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் பள்ளிக்குச் சென்று முறையிட்டனர். மேலும் இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பாலியல் துன்புறுத்தல் புகாரில் இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை என தாம்பரம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட கண்டிகை அரசுப் பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்தவுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் இன்ஸ்பெக்டர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணையில் அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. பள்ளி சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்கு மூலம், சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசுப் பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தையின் நலன் கருதி, சரிபார்க் கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளும் துறை சார்ந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.