பிரபஞ்ச அழகி 2026: சிங்கப்பூர் பங்கேற்பு உறுதி
பேங்காக்: இவ்வாண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு தென்கிழக்காசிய நாடுகளை விலக்குவதற்கான முயற்சியைத் தாய்லாந்து அழகிப் போட்டிக்கான இயக்குநர் நவாத் இத்சராகிரிசில் நிராகரித்துள்ளார்.
தாய்லாந்தும் சம்பந்தப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றாகும். சம்பந்தப்பட்ட நாடுகளைப் பிரதிநிதிக்கும் அழகிகளுக்கு புவெர்ட்டோ ரிக்கோவில் நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தக ஒப்பந்த சர்ச்சை
தாய்லாந்து, இந்தோனீசியா, வியட்னாம், லாவோஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை ஜேகேஎன் யுனிவர்ஸ் நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்றும் அதன் காரணமாக அந்நாடுகள் 75வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் பிரபஞ்ச அழகி அமைப்பின் (எம்யுஓ) பெயரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
மிஸ் யுனிவர்ஸ் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான நவாத், அந்நாடுகளின் ஆறு பிரதிநிதிகளும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்க புவெர்ட்டோ ரிக்கோ தலைநகர் சான் ஹுவானுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பங்கேற்கும் நாடுகளை விலக்குவது போன்ற முடிவுகளுக்கு நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்வழி ஒப்புதல் அளிக்கப்படவேண்டும் என்றும் ஒரு தரப்பு மட்டும் முடிவெடுக்க முடியாது என்றும் திரு நவாத் கூறுகிறார். இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் சொன்னார்.