பிரிக்ஸ் மாநாடு: டெல்லியில் உலகத் தலைவர்கள் வருகை & பாதுகாப்பு
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு நடக்கவுள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதன் காரணமாக டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ஊடகத் தகவல்கள்படி ரஷ்ய அதிபர் புட்டின் செப்டம்பர் 11ஆம் தேதியும் சீன அதிபர் ஸி செப்டம்பர் 12ஆம் தேதியும் இந்தியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களும் பாலாம் விமானப்படைத் தளத்தில் வந்திறங்கி, அங்கிருந்து சாணக்யபுரி பகுதியில் உள்ள ஹோட்டல்களுக்குச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
சீன, ரஷ்யத் தலைவர்கள் தங்கவுள்ள ஹோட்டல்களுக்கு அந்நாடுகளின் பாதுகாப்புக் குழுக்கள் ஏற்கெனவே வந்துசேர்ந்துள்ளன.
அக்குழுவினர் அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு வந்துள்ளனர். அதிபர்கள் தங்கும் தளங்கள் முதல் ஹோட்டல்களின் கூரை, தரைத் தளம் வரை பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சீன அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ரஷ்ய அதிபர் தங்கவுள்ள ஹோட்டலில் ஒரு கூடுதல் துணைக் காவல் ஆணையர், இரண்டு உதவி காவல் ஆணையர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் ஊழியர்கள் ஒவ்வொருவரின் பின்னணியையும் காவல்துறை சரிபார்த்துள்ளது. இரு அதிபர்களும் தங்களது சொந்த வாகனங்கள், பாதுகாப்பு வாகனங்களை விமானம் மூலம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, விமான நிலையம், ஹோட்டல்கள் மற்றும் பாரத் மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கிட்டத்தட்ட 30,000 காவல்துறையினரை டெல்லி காவல்துறை குவித்துள்ளது.
இந்தோனீசிய அதிபர், எத்தியோப்பியப் பிரதமர், தாய்லாந்தின் துணைப் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் ஒரே ஹோட்டலில் தங்குகிறார்கள்.
அபுதாபி பட்டத்து இளவரசர், சவூதி அரேபியா, பஹ்ரேன், பிரேசில் ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்கள் வேறொரு ஹோட்டலில் தங்குகிறார்கள்.
ஈரான் அதிபர் தனி ஹோட்டலில் தங்குவார். மலேசியப் பிரதமர், நைஜீரிய இணையமைச்சர், உகாண்டாவின் துணை அதிபர், ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் ஒரே ஹோட்டலில் தங்குவார்கள் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.