📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 09, 2026 12:00 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு - ஒப்பந்ததாரர்கள் வேதனை

எம்-சாண்ட் ஒரு யூனிட் ரூ. 500-ம், பி-சாண்ட் ரூ. 700ம் அதிகரித்துள்ளது. இதேபோல், கட்டுமானக் கம்பியின் விலை கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 6 வரை உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Published : June 8, 2026 at 8:15 PM IST

சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விலை உயர்வின் எதிரொலியாக தற்போது கட்டுமான பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்சமயம் ஜல்லி, செங்கல், சிமெண்ட், கம்பி, மணல் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "தற்போதைய நிலவரப்படி எம்-சாண்ட் (M-Sand) விலை ஒரு யூனிட்டுக்கு ரூ. 500-ம், பி-சாண்ட் (P-Sand) ரூ.700ம் அதிகரித்துள்ளது. இதேபோல், கட்டுமானக் கம்பியின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை உயர்ந்துள்ளது.

பொதுவாக, நாங்கள் ஒரு புதிய கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்குச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அதற்கான திட்ட மதிப்பீட்டை (Quotation) வாடிக்கையாளர்களிடம் வழங்கிவிடுவோம். அவ்வாறு, ஒரு சிறிய பணிக்கு சதுர அடிக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 என முன்பு ஒப்பந்தம் செய்திருந்தோம்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள திடீர் விலை உயர்வால் எங்களுக்கு செலவு அதிகரித்துள்ளது. இதைக் காரணமாக கூறி கூடுதல் தொகையை வாடிக்கையாளரிடம் கேட்டால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாவார்கள்.

இன்றைய காலகட்டத்தில், 5 லட்சம் ரூபாயில் முடிக்க வேண்டிய ஒரு சிறிய கட்டுமான வேலை, விலைவாசி உயர்வால் தற்போது ரூ.10 லட்சம் வரை தேவைப்படும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனால் வீடு கட்டுவோர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் நிலவும் சூழலால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. குவாரிகள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் இருந்து கட்டுமானப் பொருட்களை வேலை நடக்கும் இடங்களுக்கு ஏற்றி வருவதற்கான போக்குவரத்துச் செலவு கடுமையாக அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைத்து எரிப்பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் மாநில அரசுகளாலும் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும். இந்த விலை உயர்வால் எங்களைப் போன்ற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்களின் இந்த நியாயமான குறைகளை கேட்டு, கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைத்து நல்லதொரு தீர்வை அறிவிக்க வேண்டும்" என்று சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.