பைலட் ஸ்மித் உடன் பேசிய பிரதமர் மோடி புகழாரம்
இந்திய பைலட் ஸ்மித் மச்சார், பிரதமர் மோடி
இந்திய பைலட் ஸ்மித் மச்சார் உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ காலில் பேசினார். அப்போது, “ஒட்டுமொத்த நாடும் உங்களால் பெருமை கொள்கிறது” என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். “ஃபிளை துபாய்” விமான கடத்தலை வெற்றிகரமாக முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சார், ஐக்கிய அரபு தலைநகர் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ காலில் பேசினார்.
பிரதமர்: எப்படி இருக்கிறீர்கள்? உடல்நிலை எப்படி இருக்கிறது?
ஸ்மித் : பராவாயில்லை.
பிரதமர்: ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. உங்கள் வீரம், விவேகம், நிதானத்தை பாராட்டுகிறேன். ஒரு நொடிப்பொழுதில் நீங்கள் எடுத்த விவேகமான முடிவு பலரின் உயிர்களை காப்பாற்றி உள்ளது. எப்படியாவது உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற இந்தியர்களின் வேட்கை உங்களிடம் இருந்து வெளிப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது. யாருடைய உயிரையும் இந்தியர்கள் பறிப்பது கிடையாது. உயிர்களைக் காப்பதையே தங்களின் தலையாய கடமையாக இந்தியர்கள் கருதுகின்றனர்.
உங்கள் உடல் முழுவதும் மிகப்பெரிய காயங்கள் ஏற்பட்டு உள்ளன. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நீங்கள் போராடிக் கொண்டிருந்தீர்கள். அந்த நேரத்தில் உங்களது உயிரைப் பணயம் வைத்து அனைத்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளீர்கள். உங்களால் 140 கோடி இந்தியர்களின் மதிப்பு, மரியாதை உயர்ந்திருக்கிறது. விமானிகள் அறையில் நடந்தது என்ன?
ஸ்மித்: துணை விமானி திடீரென நடத்திய கொடூர தாக்குதலில் நான் நிலைகுலைந்து தரையில் விழுந்துவிட்டேன். எனது உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நான் 17 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வருகிறேன். சுமார் 11 ஆண்டுகள் விமான கேப்டனாக பணியாற்றி வருகிறேன். இந்த அனுபவத்தின் அடிப்படையில் விமானத்தின் நிலையை என்னால் உணர முடிந்தது. தரையில் விழுந்து கிடந்தாலும் விமானம் செங்குத்தாக கீழே இறங்குவதை என்னால் தெளிவாக உணர முடிந்தது.
ஹனுமன் பாடலை பாடினேன்
எனது வாழ்நாளின் இக்கட்டான நேரங்களில் ஹனுமன் பாடலை பாடுவது வழக்கம். உயிர்போகும் தருவாயில் நான் ஹனுமன் பாடலைப் பாடினேன். விமானிகளின் அறைக் கதவு எனக்கு அருகே இருந்தது. இதுதான் கடைசி வாய்ப்பு என்பதை உணர்ந்தேன். என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டே இருந்தது. ஆனாலும் எனது முழுபலத்தையும் திரட்டி கதவை திறந்துவிட்டேன்.
அதன்பிறகு பயணிகள் உள்ளே வந்தனர். மிகப்பெரிய பேரழிவை தடுத்ததில் அனைவருக்கும் சரிசமமான பங்கு உள்ளது. விமானத்தில் உள்ள பயணிகள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். அந்த உத்வேகத்தில் உயிர் போகும் தருவாயிலும் கதவை திறந்தேன். எனது சிறுவயது முதலே நீங்கள்தான் எனக்கு முன்மாதிரி தலைவர். உங்களோடு பேசுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது உங்களோடு பேசும்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.
பிரதமர்: உங்களது அம்மா, அப்பா, மனைவியுடன் பேசினேன். இக்கட்டான நேரத்தில் நீங்கள் ஹனுமன் பாடலை பாடி தைரியத்தை பெற்றுள்ளீர்கள். உங்கள் அம்மா கீதாபென்னும் அப்பா பூபேந்திர மச்சாரும் உங்களுக்கு பகவத் கீதையின் போதனைகளை கற்றுக்கொடுத்து நல்லொழுக்கத்துடன் வளர்த்து உள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன். உங்கள் மனைவி சோனல் தைரியசாலி. துயரமான நேரத்திலும் அவர் மிகுந்த மன உறுதியுடன் பேசினார்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் என்னை தொலைபேசியில் அழையுங்கள். நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்தியா முழுவதும் அனைத்து கோயில்களிலும் உங்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். நீங்கள் இந்தியா திரும்பும் நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி, பைலட் ஸ்மித் மச்சார் இடையிலான உரைடயால் சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. பிரதமருடன் பேசும்போது ஸ்மித் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். ஸ்மித் உடன் பேசிய வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
கடவுள் மனவலிமையை அளித்தார்
இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் தந்தை பூபேந்திர மச்சார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இஸ்ரேல் விமான பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடு
இஸ்ரேலின் ‘சேனல் 12’ செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தூதரக உறவு இல்லாத நாடுகளை சேர்ந்தோர் இஸ்ரேலில் பணியாற்ற அனுமதி கிடையாது. இஸ்ரேலுக்கும் ஓமன் நாட்டுக்கும் இடையே தூதரக உறவு கிடையாது. ஆனால் ஓமன் நாட்டைச் சேர்ந்த பைலட்கள், இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வந்து உள்ளனர்.
தற்போது ஓமனை சேர்ந்த துணை பைலட் ஒருவர் ‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்தி இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை முயற்சி செய்துள்ளார். இனி வரும் காலத்தில் இஸ்ரேலுக்கு வரும் விமானங்களை இயக்கும் பைலட்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஃபிளை துபாய் நிறுவனத்தின் அலட்சியம்
இஸ்ரேல் விமான போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், “தூதரக உறவு இல்லாத நாடுகளின் பைலட்கள் இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று ஃபிளை துபாய் விமான நிறுவனத்துக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் அந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் விமான கடத்தல் முயற்சி நடைபெற்று இருக்கிறது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் கவலையை எடுத்துரைத்துள்ளோம். இனி வரும் காலங்களில் பைலட்டுகளின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்" என கூறப்பட்டுள்ளது.
சிறுமி அலறியதால் உஷாரான பயணிகள்
பயணிகள் விமானத்தின் காக்பிட் (பைலட்கள் அறை) கதவு கெவ்லர் என்ற பைபரால் தயாரிக்கப்பட்டது ஆகும். இது எஃகைவிட 5 மடங்கு வலிமையானது ஆகும். காக்பிட் கதவின் மீது உருக்கு மற்றும் டைட்டானியம் முலாமும் பூசப்பட்டு இருக்கும். துப்பாக்கிச்சூடு தாக்குதல், கையெறி குண்டு தாக்குதலால் காக்பிட் கதவை திறக்க முடியாது.
பைலட்டுகளின் அனுமதி பெற்றே விமான பணிப்பெண்கள், ஊழியர்கள் காக்பிட் அறைக்குள் நுழைய முடியும். உள்ளிருந்து மட்டுமே கதவை திறக்க முடியும். வெளியில் இருந்து கதவை திறக்க முடியாது.
ஓமனை சேர்ந்த துணை பைலட் மிகக் கொடூரமாக தாக்கிய நிலையில் தரையில் விழுந்து கிடந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மிகுந்த சிரமப்பட்டு காக்பிட் கதவை திறந்து உள்ளார்.
விமானத்தின் காக்பிட்டை ஒட்டி கழிப்பறை இருக்கும். 6 வயது சிறுமி நினா கழிப்பறையில் இருந்து வெளியே வரும்போது பைலட் ஸ்மித்தின் அலறலை கேட்டு பயத்தில் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அப்போது சிறுமி அலறியதால் மற்ற பயணிகள் உஷாரானார்கள். சிறுமியின் தந்தையும் சக பயணிகளும் காக்பிட் அறையை நோக்கி ஓடி வந்துள்ளனர். இதன் காரணமாகவே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.