நடப்பு கொள்முதல் பருவத்திற்கு அரசாணை வெளியிடாததால் நெல் கொள்முதல் நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் வேதனை
நடப்பு கொள்முதல் பருவத்திற்கு அரசாணை வெளியிடாததால் நெல் கொள்முதல் நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்: தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல்லை, இந்திய உணவு கழகத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முகவராக இருந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து தருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, இந்திய உணவு கழகத்தின் வழிகாட்டுதல் படி, பொது விநியோக திட்டத்துக்கு இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு இந்திய உணவு கழகம் வாயிலாக ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
இந்திய உணவு கழகம் ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் பருவ காலத்தை அக்டோபர் 1ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை நிர்ணயித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக மே 24ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது குறுவை சாகுபடியும் முன்கூட்டியே தொடங்கி, அறுவடைக்கு வந்ததால், விவசாயிகளின் கோரிக்கையின்படி தமிழக அரசு கொள்முதல் பருவத்தை அக்டோபர் 1க்கு பதிலாக செப்டம்பர் 1ம் தேதியே திறக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி அனுமதி பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும், குறுவை கொள்முதலை செப்.1 ம் தேதியே கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு, புதிய விலையில் கொள்முதல் செய்து வருகிறது. அஇந்தாண்டும் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் செப்.4ம் தேதி ஆகியும் இதுவரை, புதிய கொள்முதல் பருவத்தில், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்ய அரசாணை வரவில்லை எனக் கூறி கொள்முதல் செய்யாமல் உள்ளனர். அதே நேரத்தில், ஒரு சில இடங்களில் கொள்முதல் பணியை செய்தாலும், அதற்கான ரசீது மற்றும் பணம் பட்டுவாடா வழங்காமல் உள்ளனர். இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாய சங்க மாநில தலைவர் முகமது இப்ராகிம் கூறியதாவது:
கடந்தாண்டு பொது ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.2,600ம், சன்ன ரகத்துக்கு கடந்தாண்டு ரூ.2,545 வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு ரூ.2,750ம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய விலையை உடனடியாக அமல்படுத்த அரசாணையை வெளியிட வேண்டும், இல்லையென்றால் கொள்முதல் பருவ காலத்தை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறும்போது, நெல் கொள்முதல் செய்ய நிகழாண்டுக்கான அரசாணை இதுவரை வரவில்லை, வந்தவுடன் புதிய விலையில் கொள்முதல் செய்யப்படும் என்றனர்.